சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஜோடிகளின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்க காலத்தில், தான் கருவுற்று இருப்பதாக அனுஷ்கா சர்மா புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் விராட் கோலியும் ஜனவரி மாதம் தங்கள் வீட்டில் புதுவரவு இருக்கும் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி அனுஷ்கா சர்மா பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு 'வாமிகா' என்று பெயரிட்டுள்ளனர். இதுவரை தங்கள் குழந்தையின் முகத்தை இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை.

இந்நிலையில், நேற்று (ஜூலை.11) தங்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து சிறிய விழா ஒன்றை விருஷ்கா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா தனது சமூக வலைதளப்பக்கத்தில், ”அவளுடைய சிறு புன்னகை எங்கள் உலகை அழகாக மாற்றுகிறது” என்று கூறி புகைப்படங்களை பதிவிட்டார்.

பூங்கா ஒன்றில் படுத்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா சர்மா, குழந்தையை தன் மீது படுக்கவைத்து வானத்தைக் காட்டும் வகையிலும், விராட் கோலி குழந்தையைக் கொஞ்சுவது போன்றும் இந்தப் புகைப்படங்கள் உள்ளன.