பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அதேபோல் இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர்.
இவர் சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் 2018-2019ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் தன்னுடைய வருமானத்துக்கான வரியாக 70 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாக அமிதாப் பச்சனின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் வங்கியில் கடனை திருப்பி செலுத்த இயலாத ஏழை விவசாயிகள் 2,084 பேருக்கு விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்தியுள்ளார்.
அதேபோல் பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாயை வழங்கினார். இதுபோன்ற பல சமூக சேவைகளையும் அமிதாப் பச்சன் செய்து வருகிறார்.
இதுபோன்று நன்கொடைகளுக்கு மத்திய அரசு வருமான வரி விலக்கு அளித்துள்ள போதிலும் தனது வருமான வரியான 70 கோடியை அமிதாப் செலுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
'கள்வனின் காதலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தமிழ்வாணன் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இயக்கிவரும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.