திரைப்பட பின்னணி பாடகர் மிகா சிங் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உறவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் தலைமறவாக இருந்துவரும் தாவூத் இப்ராஹிம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மிகா சிங் செயல்பட்டதால் பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால், மிகா சிங் திரைப்படத்தில் பாட இந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. மேலும், மிகா சிங்கை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தடையை மீறி மிகா சிங்கின் நிகழ்ச்சியில் பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மிகா சிங் மீது இந்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.