மும்பை: காயம் ஏற்பட்டிருப்பதாக உலாவரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஆலியா பட்.
பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் இது பற்றி தனது ட்விட்டரில், படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு அவதிப்படுவதாக என்னைப் பற்றி உலாவரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விரிவாகப் பதிவிட்டுள்ள ஆலியா, எனக்கு ஏற்பட்ட பழைய காயம் பற்றிதான் செய்திகள் பரவுகின்றன. இதற்காக வீட்டில் நான் ஒய்வெடுத்து தற்போது சரியாகிவிட்டது. எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. இனி இதுபோன்ற செய்திகளை பெரிதாக வெளியிடுவதற்கு முன் தயவுசெய்து நடந்த உண்மையை என்னிடம் தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சில நாள்கள் ஓய்வுக்குப் பின் 'கங்குபாய் கதியாவாடி' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். காயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்தியை அறிந்து விரைவில் குணமாக வேண்டிய குறுஞ்செய்தி, கருத்துகள் பகிர்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது புகைப்படத்தையும், வளர்ப்பு பூனை புகைப்படத்தையும் பகிர்ந்து, 'செல்ஃபி எடுக்கும்போது காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஆலியா பட், அந்தப் புகைப்படத்தில் போர்வையை தனது உடல் முழுதும் போர்த்தியபடி இருந்தார்.
இந்தப் புகைப்படத்தை வைத்துதான் ஆலியாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் பரவ காரணமாக அமைந்தது.