அக்ஷய் குமார் நடிப்பில் இறுதியாக ஓடிடி தளத்தில் வெளியான 'லக்ஷ்மி' படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனையடுத்து அபிஷேக் சர்மா இயக்கும் ராம் சேது படத்தில் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அருணா பாட்டியா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ராமரின் கொள்கைகளை அனைத்து இந்தியர்களின் மனதில் உயிரோட்டமாக வைத்திருக்கும் முயற்சியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அக்ஷய் குமார் தீபாவளியன்று சமூகவலைதளத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
விரைவில் தொடங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற உத்தரப் பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் படக்குழு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.