எம்ஐ நிறுவனத்தின் ஹிட் அடித்த தயாரிப்புகளில் ஒன்று அந்நிறுவனத்தின் ஃபிட்னஸ் பேண்ட். எம்ஐ பேண்ட் 4 மாடல் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், எம்ஐ நிறுவனத்தின் அடுத்த ஃபிட்னஸ் பேண்ட் மாடல் மீதான எதிர்பார்ப்புகள் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய எம்ஐ பேண்ட் 5 மாடலிலுள்ள சில வசதிகள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. அதன்படி புதிய எம்ஐ பேண்ட் 5இல் அமேசான் அலெக்ஸா வசதி இடம்பெற்றிருக்கும். அதேபோல ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க SpO2 வசதியும் இதில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஐ பேண்ட் 4ஐ விட பெரிய அளவில், அதாவது 1.2 இன்ச் ஒ.எல்.இ.டி. டிஸ்பிளேவை இது கொண்டிருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் பெரிய பேட்டரி திறனையும் எம்ஐ பேண்ட் 5 பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஒருவர் ஆரோக்கியமாக இருக்கத் தினசரி எத்தனை நேரம் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் என்பதை ஒருவரின் இதயத் துடிப்பின் அளவை வைத்துப் பரிந்துரைக்கும் "Personal Activity Intelligence (PAI)" என்ற வசதியும் இதில் இருக்கும்.
இது தவிரப் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தைக் கணக்கிட உதவும் புதிய வசதியும் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி தற்போது ஆப்பிள் வாட்சுகளில் மட்டுமே உள்ளது.
எம்ஐ பேண்ட் 4 சீனாவில் ஜூன் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. சீனாவில் தற்போது கரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதால், ஜூன் அல்லது ஜூலை மாதம் புதிய எம்ஐ பேண்ட் 5 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குவியும் ஆர்டர்கள்... திணறும் ரியல்மி!