நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலாக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், நான்கு பேரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என் 9 என்ற ராக்கெட், இன்ஸ்பிரேஷன் 4 எனும் விண்கலத்துடன் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.32 மணிக்கு விண்வெளிக்கு ஏவப்பட்டது.
90 நிமிடங்களுக்கு ஒருமுறை
அந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்து 12ஆவது நிமிடத்தில், அதன் விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதைக்குள் வெறிகரமாக நுழைந்தது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 575 கி.மீ உயரத்தில், 27,300 கி.மீ வேகத்தில் மூன்று நாள்களுக்கு பூமியைச் சுற்றி வரும். இதனால், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாக இந்த விண்கலம் சுற்றிவரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விண்வெளிச் சுற்றுலாவில் ஷிப்ட் 4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனரான ஜார்ட் ஐசக்மேன், எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்ட மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ் (29), கிறிஸ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ராக்டர் ஆகியோர் சென்றுள்ளனர். செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணும் ஆர்சனாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லாண்டிக்கில் லேண்டிங்
கிறிஸ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ராக்டர் ஆகிய இருவரும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலம் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் பெருங்கடலில் தரையிறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலா மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2ஆவது பாறை மாதிரியையும் வெற்றிகரமாகச் சேகரித்த பெர்சவரன்ஸ்