சென்னை: சென்னை ஐஐடி மின்னணுக் கழிவு நிர்வாகத்தில் முறையான மற்றும் முறை சாராப் பொருளாதாரங்களை ஒருங்கிணைத்து புதியத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இ-சோர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், மின் மற்றும் மின்னணுக் கழிவுகளின் பரிமாற்றத்திற்கான ஒரு இணையதள சந்தையை உருவாக்கி, விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையிலான தொடர்பிற்கு வழி வகுக்கும்.
உலகளவில் ஒரு ஆண்டுக்கு 53.6 டன் மின்னணுக் கழிவுகள் உருவாகிறது என்று ஒரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அடுத்த 16 ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் எனவும் கூறப்படுகிறது. இதில், சுமார் 85 விழுக்காடு வீணாகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மின்னணு கழிவுகள்
உலகில், மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், இது மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. 2019-2020 ஆண்டில் 38 விழுக்காடு அதிக மின்னணுக் கழிவுகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் 5 விழுக்காடு மட்டுமே மறு பயன்பாட்டுக்குச் செல்கிறது.
![இ சோர்ஸ் இணையதளம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-iitm-online-platform-esource-ewaste-script-vedio-7204807_30082021143853_3008f_1630314533_1029.jpg)
இ-சோர்ஸ் என்று அழைக்கப்படும் இத்திட்டம், நிலைதன்மைக்கான இந்தோ - ஜெர்மன் மையம் (Indo-German Centre for Sustainability) என்ற அமைப்பின் தலைமையில் செயல்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மின்னணுக் கழிவுகளை வாங்குவோர் விற்போர் இடையே, இரு தரப்பினரின் தேவைகளையும் கருத்திற்கொண்டு, ஒரு தொடர்பை ஏற்படுத்துவதன் மூலமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறது.
பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களின் பயன்பாட்டுத் தடத்தைக் கண்டறிந்து, சுழற்சி பொருளாதாரத்தை அடித்தளமாக கொண்டு இந்த இ- சோர்ஸ் திட்டம் செயல்படுகிறது.
கள்ளச்சந்தை
இதன் மூலம் கள்ளச் சந்தைகளை தடுத்து, மின்னணு உதிரி பாகங்களை வாங்க பழுதுபார்ப்போருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட மறு பயன்பாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான அளவு மின்னனுப் பொருட்கள் சென்று சேரவும் வாய்ப்பாக அமையும்.
இ-சோர்ஸ் மூலம், அனைத்துப் பயனர்களுக்கும், குறிப்பாக முறைசாரா பயனர்களுக்கு டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்துதல் மற்றும் தளத்தின் நன்மைகள் குறித்த அறிவு இடைவெளியைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்ட பரப்புரைகளை உருவாக்கி, பயனர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் அவர்களை இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சி போன்ற அரசு அமைப்புகள், பிற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு, தகவல் பரப்பும் திட்டம் போன்றவைகளை உருவாக்குவதன் மூலம் மாற்றத்திற்கான இந்த முயற்சியை சிறப்பாக செய்ய முடியும் என ஐஐடி சென்னை கூறியுள்ளது.