பெலகாவி (கர்நாடகம்): ஏழை மக்களுக்கு உதவும் முயற்சியில், ‘நிர்னல்’ என்னும் குறைந்த விலை தண்ணீர் சுத்திகரிப்பானை, 24 வயதான பொறியல் மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இதன் விலை வெறும் 30 ரூபாய்தானாம். வெறும் 2000 ரூபாய் முதலீட்டில்தான், தன் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் பொறியல் மாணவரான நிரஞ்சன் கராகி. தன் கண்டுபிடிப்பு ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற முனைப்பில் இதனை உருவாக்கியுள்ளார். குறைந்த விலையும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான இதற்கு ‘நிர்னல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அங்கடி தொழில்நுட்பக்கல்லூரி மாணவரான நிரஞ்சன், தன் குறைந்த விலை சுத்திகரிப்பான் மூலம் பல பேருக்கு வேலையளித்து, இதுவரை இரண்டு லட்சம் தண்ணீர் சுத்திகரிப்பானை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதன்மூலம் நகரங்களில் இருக்கும் ஏழை மக்கள் பலருக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
இந்தத் தண்ணீர் சுத்திகரிப்பான் மூலம் 100 லிட்டர் தண்ணீர் வரை சுத்திகரிக்க முடியும் என்று நிரஞ்சன் உறுதியாகக் கூறுகிறார். இந்தியா மட்டுமில்லாமல், அமெரிக்கா, மலேசியா, இலங்கை போன்ற உலக நாடுகளுக்கு தற்போது தனது நிர்னல் சுத்திகரிப்பானை ஏற்றுமதி செய்து அசத்திவருகிறார் நிரஞ்சன்.
நிர்னாலின் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் நிரஞ்சன், "சுத்திகரிப்பான்கள் ரூ.30 முதல் ரூ.2,500 வரை கிடைக்கும். இது குப்பிகள், குழாய்களில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மின்சாரம் இல்லாமல் இயங்கக்கூடியது. வைரஸ், பாக்டீரியா உள்ள அசுத்தமான தண்ணீரை உடனடியாகச் சுத்திகரிக்க முடியும். தீங்கு விளைவிக்கும் குளோரின் ஆகியவற்றை ஒரு நொடிக்குள் நீக்குகிறது" என்று கூறினார்.