பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகம் செய்தனர். டெல்லியிலிருந்து புனே நகருக்கு பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அணிவகுப்பு பயணத்தையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை சந்தையில் களமிறங்கியுள்ளது. இதுவரை அர்பனைட் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பஜாஜ் நிறுவனத்தின் பெரும் புகழ்பெற்ற சேத்தக் (Chetak) ஸ்கூட்டர் பெயரிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
பஜாஜ் சேத்தக் இ.வி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
ஸ்டைலிங்:
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது பார்வைக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி (LED) ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், தொடு உணர் வசதியுடன் கட்டுப்பாட்டு பட்டன்கள் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
வண்ணம்:
நீலம், சிவப்பு, வெள்ளை, வெள்ளி, பழுப்பு மற்றும் கருப்பு ஆகியவற்றுடன் மொத்தம் ஆறு வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.
பேட்டரி மற்றும் இயக்க முறைகள்:
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐபி-67 (water and dust proof) லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 5 - 15 (Amp)ஆம்பியர் எலெக்ட்ரிக்கல் பாயிண்ட் மூலமாக சார்ஜ் செய்ய முடியும். பேட்டரியில் மின் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பமும் உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது, 95 கி.மீ. தூரமும், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கினால் 85 கி.மீ. தூரமும் பயணிக்க முடியும்.
விலை விபரம்:
இதன் விலை விபரம் வெளியிடப்படவில்லை. வரும் ஜனவரி மாதத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முதலில் புனே நகரிலும், தொடர்ந்து டெல்லியிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி புனே நகரின் அருகிலுள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திப் பிரிவில் 80 சதவிகிதம் பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மின்சார இருசக்கர வாகனத்தில் முதலீடு செய்யும் டாடா