நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனதாம் இவ்வுலகம். ஆனால் இன்றோ, காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு, தொழிற்சாலை மாசு, ரசாயன மாசு ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது இப்பூமி பந்து. இந்தியாவிலும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. அதில் வாகனங்களில் இருந்து வெளியேறும் கரிம எரிபொருட்களால் பல்வேறு உடல்நலக்கேடுகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாகனங்களால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த, அண்மைக்காலமாக பெட்ரோல் டீசலுக்கு மாற்றான எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் விரும்பி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, மின்சாரத்தில் ஓடக்கூடிய பந்தய வகை மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி, ’பிராணா’ என்ற பெயரில் இவ்வகை மோட்டார் சைக்கிள்களை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும், பயணிப்போர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஏரோ டைனமிக் வடிவமைப்பை இந்த வாகனம் கொண்டுள்ளது. மணிக்கு 123 கி.மீ வேகத்திலும், நான்கே நொடியில் 60 கி.மீ வேகத்தை எட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின் மோட்டார் சைக்கிள், இளைஞர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி.
ஓடுதல், பந்தயம், அதோடு பின்பக்கமாக செல்லுதல் என்ற மூன்று செயல் வகைகளை இந்த மின்சார வாகனம் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கி.மீ வரை பயணிக்கும் இதில் செல்லும்போது பெட்ரோல் வாகனங்களை ஓட்டுவது போன்ற அனுபவத்தை பெற முடியும் என்கிறார் ’பிராணா' வாகனத்தை வடிவமைத்த வல்லுநரான அரவிந்த். 2.25 லட்ச ரூபாய் மதிப்புள்ள, இதன் மோட்டார் 35 என் எம் திறனையும், 160 கிலோ எடையையும் கொண்டது எனக் கூறுகிறார் அவர்.
அடுத்த தலைமுறைக்கு முழுக்க முழுக்க மாசு நிறைந்த ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ள நமக்கு, இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளவே இதுபோன்ற புதியவைகள் பாடம் எடுக்கின்றன. எதிர்கால இளைஞர்கள் சூழல் குறித்த புரிதலோடு இவ்வகை வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நிலை வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதையும் படிங்க: அட்டகாசமான அம்சங்களுடன் சந்தையை அதிரவைக்கும் போக்கோ m3!