நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திருவிழாக் காலங்களில் தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. ஆட்டோமொபைல் தொழில் மிக மோசமான மந்தநிலையால் பாதிக்கப்பட்ட பின்னரும் கூட கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை அதிகரிக்கும் பொருட்டு சலுகைகளை அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. தள்ளுபடிகள் தவிர புதிய மாடல்களையும், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. இனி நிறுவனங்களின் தள்ளுபடிகளையும், புதிய மாடல்களையும் பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ காருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. கார்ப்பரேட் வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், சில மாடல்களின் விலையில் ரூ. 5 ஆயிரத்தைக் (ex-showroom price) குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நெக்ஸன் மின் வாகனங்களையும் (EV) அறிமுகம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் சலுகைகள் ரூ. 95,000 வரை உள்ளன. எலன்ட்ராவின் பிரீமியம் செடான் என்ற புதிய மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரேடியான் மோட்டார் சைக்கிள், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகிய இரு வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அப்பாச்சி ஆர்டிஆர் வாகனத்தை ஸ்மார்ட் போன் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்துடன் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் செப்டம்பர் மாதம் ஆப்டிமா ER மற்றும் NYX ER ஆகிய இரண்டு புதிய மின்சார இரு சக்கர வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், பிஎஸ் IV எஞ்சினை, பிஎஸ் VI எஞ்சினாக மாற்றுவதற்கான விளக்கவுரை நிதி அமைச்சகத்திலிருந்து தெளிவுபடுத்தப்பட்ட பின், ஆட்டோமொபைல் துறை மெதுவாக நிலைமைக்கு ஏற்றதாக மாறி வருகிறது.
சமீபத்தில் மாருதி சுசுகி இரண்டு லட்சம் யூனிட் பிஎஸ்-VI கார்களை ஆறு மாத கால இடைவெளியில் விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.
தென் கொரிய வாகன நிறுவனமான ஹூண்டாய், டீசல் டிரிம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பிஎஸ் VI மாடல்களை அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்போவதாகத் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.