ஹைதராபாத்: விபத்துக்குள்ளான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற எம்ஐ-17வி-5 ரக ஹெலிகாப்டர் பல உயர்ரக அம்சங்களை கொண்டதாகக் கூறப்படுகிறது.
Mi-17V-5 என்பது Mi-8/17 குடும்பத்தைச் சேர்ந்த ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டராகும். எம்ஐ ரக ஹெலிகாப்டர்களில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்திருந்தாலும், பாதுகாப்பு அம்சங்களில் அது சிறந்ததாகவே கருதப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் வரலாறு
எம்ஐ-17வி-5 ஹெலிகாப்டர் உலகளாவிய ரீதியில் ராணுவ சேவைகளுக்கு நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த செலவில், அதிக அமசங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டராகும். ரஷ்யா கசானில் உள்ள ரஷ்ய ஹெலிகாப்டர்களின் துணை நிறுவனமான கசான் ஹெலிகாப்டர்களால் எம்ஐ-17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. துருப்புக்கள் மற்றும் ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பு ஆதரவு, கான்வாய் எஸ்கார்ட், ரோந்து மற்றும் மீட்பு போன்ற ராணுவ பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம்.
2008ஆம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு, இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் மூலம் ரஷ்ய ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு 80 ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
2011ஆம் ஆண்டு ரஷ்ய நிறுவனம் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களை விநியோகம் செய்யத் தொடங்கியது. கடைசியாக 80ஆவது ஹெலிகாப்டர், 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவப் படையில் இணைக்கப்பட்டது.
இயந்திரம் மற்றும் செயல்திறன்
Mi-17V-5 கிளிமோவ் (Klimov) TV3-117VM அல்லது VK-2500 டர்போ-ஷாஃப்ட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. TV3-117VM அதிகபட்சமாக 2,100 குதிரைத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் VK-2500 2,700 குதிரைத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.
புதிய தலைமுறை ஹெலிகாப்டர்கள் VK-2500 இன்ஜினை கொண்டுள்ளன. இது TV3-117VM ரக இன்ஜின்களை விடவும், மேம்பட்ட பதிப்பான புதிய முழு அதிகார டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் (FADEC) கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். மேலும், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 580 கிலோ மீட்டர் அதிகபட்ச தூரம் செல்லும் திறன்கொண்டது. இரண்டு துணை எரிபொருள் டேங்குகள் பொருத்தப்பட்டால் 1,065 கிமீ வரை இதன் தூர அளவை நீட்டிக்க முடியும். இந்த ஹெலிகாப்டரலால் அதிகபட்சமாக 6,000 மீட்டர் உயரத்தில் பறக்க முடியும்.
அறை மற்றும் அம்சங்கள்
Mi-17 போக்குவரத்து ஹெலிகாப்டர் ஒரு பெரிய அறையைப் கொண்டுள்ளது. பயணிகளுக்கான நிலையான கதவு, விரைவாக படை வீரர்கள் மற்றும் சரக்குகளை நகர்த்துவதற்கு பின்புறத்தில் ஒரு சரிவான கதவு உள்ளது. ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 13,000 கிலோ எடையையும், 36 ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் அல்லது 4,500 கிலோ எடையை தூக்கிச் செல்லும் திறன் கொண்டது. இது வெப்பமண்டல, கடல்சார் காலநிலைகள், பாலைவன சூழல் என அனைத்து விதமான தட்பவெட்ப சூழல்களையும் தாங்கிக் கொள்ளும் வலுவான கட்டமைப்பைக் கொண்டது.
காக்பிட்
Mi-17V-5 ஹெலிகாப்டரின் பைலட் அறை வலுவான கண்ணாடிகளை முகப்பில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல அமைப்புகளைக் கொண்ட நான்கு திரைகள் (MFDகள்), நைட்-விஷன் கருவிகள், ஒரு ஆன்-போர்டு வானிலை ரேடார் மற்றும் ஒரு தானியங்கி பைலட் அமைப்பும் அடங்கியுள்ளது.
ஆயுத அமைப்புகள்
போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், நெருக்கடியான சூழலில், Mi-17V-5 ஆனது Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm இயந்திர துப்பாக்கி, PKT இயந்திர துப்பாக்கிகள் மற்றும் AKM துணை இயந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இயந்திர துப்பாக்கியை பொருத்து நிலையான தாக்குதலையும் மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டரில் வசதிகள் உள்ளது.
இதையும் படிங்க: முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து!