மும்பை (மகாராஷ்டிரா): ஜூலை மாதம் ரயிலில் தனது மூத்த அதிகாாி மற்றும் மூன்று பயணிகளை சுட்டுக் கொன்ற ரயில்வே (RPF) கான்ஸ்டபிள் சேத்தன் சிங் சவுத்ரி, பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, 2017ல் ஒரு முஸ்லீம் நபரைத் துன்புறுத்தியது உட்பட இதுவரை மூன்றுக்கு மேற்பட்ட ஒழுக்கம் தொடர்பான சம்பவங்களில் சேத்தன் சிங் சவுத்ரி ஈடுபட்டுள்ளார், மேலும் அவரை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் முஸ்லீம் நபரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்தியது தொடர்பாக சவுத்ரிக்கு எதிராக விசாரணைக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். குஜராத்தில் சவுத்ரி தன்னுடன் பணியிலிருந்த சக ஊழியரைத் தாக்கியதாகவும், மற்றொரு சம்பவத்தில் தன்னுடன் பணியிலிருந்த சக ஊழியரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளதும் தொியவந்துள்ளது. ரயில் கொலை சம்பவத்தின் அடிப்படையில் 34 வயதான சவுத்ரியை பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜூலை 31ஆம் தேதி அதிகாலையில் ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பால்கர் நிலையத்திற்கு அருகில் இருந்த போது சவுத்ரி தனது மூத்த அதிகாரியான திகாரம் மீனா மற்றும் மூன்று பயணிகளை சுட்டுக் கொன்றார். பயணிகள், அப்துல் காதர் முகமது ஹுசைன் பன்புராவாலா, சையத் சைபுதீன் மற்றும் அஸ்கர் அப்பாஸ் ஷேக், ரயிலின் வெவ்வேறு பெட்டிகளில் பயணம் செய்தார். பின்னர் அரசு ரயில்வே போலீசார் சவுத்ரியை கைது செய்தனர். இந்த திடுக்கிடும் குற்றத்தில் எதற்காக ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் சவுத்ரி ஈடுபட்டுள்ளாா் அதற்கான நோக்கம் என்ன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சவுத்ரி முதலில் தனது துப்பாக்கியால் ஆர்.பி.எஃப் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீனாவையும், B5 கோச்சில் பயணித்த ஒருவரையும், ரயிலின் பேண்ட்ரி காரில் இருந்த மற்றொரு பயணியையும், S6 கோச்சில் இருந்த ஒரு பயணியையும் சுட்டுக் கொன்றார். தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் சவுத்ரி இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதையும் படிங்க: நாங்குநேரி விவகாரம்;பாதிக்கபட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை !