மின்சாரம் என்பது சுவாசத்தைப் போலவே முக்கியமானது என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். பல ஆண்டுகளாக, தடையற்ற மின்சாரம் என்பது நமது தலைவர்களின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது. மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய வழிமுறையாக, தரமான சேவைகளை வழங்குவதற்காக புதிய மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள் 2020ஐ உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்த பின்னர் வகுக்கப்பட்ட விதிகளை மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், சேவைகளில் ஏற்படும் குறைபாட்டிற்கு விதிக்கப்படும் அபராதம் மின்சார ஆணையத்தால் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.
அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை பொதுவாக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனுபவிக்கின்றனர். துணை நிலையங்கள் மற்றும் மின் தடங்களின் மோசமான பராமரிப்பு, மின்னழுத்த ஏற்ற இறக்கங்களால் இயந்திரங்கள் நிற்பது, மின்தடையை தாமதமாக சரிசெய்வது மற்றும் அதன் விளைவாக ஏற்படும் குளறுபடிகள் ஆகியவை மக்களின் அன்றாட அனுபவங்களின் ஒரு பகுதியாகும்.
புதிய விதிகளின்படி, மின்சாரம் வழங்குவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதை நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மின்தடை ஏற்பட்ட இடம், தடைக்கான காரணம் மற்றும் சரிசெய்யப்படும் நேரம் ஆகியவற்றை ஒரு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும். தவிர, புதிய இணைப்புகளை சரியான நேரத்தில் வழங்கவும், செயல்படாத மீட்டர்களை உடனடியாக மாற்றவும் விதிகள் கூறுகிறது.
ப்ரீபெய்ட் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் 2019 ஜனவரியில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தும் இதுவரை இந்த உத்தரவு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய விதிகளின்படி பில்லிங், ப்ரீபெய்ட் மீட்டர்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் வயதானவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று சேவை வழங்கல் போன்றவவை திறம்பட செயல்படுத்தப்பட்டால் நிச்சயம் வரவேற்கத்தக்கது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் தனிநபர் மின் நுகர்வு மூலம் அளவிடப்படுகிறது. சீனாவில் தனிநபர் நுகர்வு 4000 கிலோவாட் ஆகவும், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தைவான் மற்றும் பிற நாடுகளில் இது 10,000 கிலோவாட்டிற்கும் அதிகமாகும். இந்த ஆண்டின் ஆரம்ப நாட்களில், இந்தியாவில் தனிநபர் மின் நுகர்வு 1000 கிலோவாட் ஆக இருந்தது. நம் நாட்டில் மின் உபரி மாநிலங்கள் என்று அழைக்கப்படுகிற குஜராத், ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட மின்தடை என்பது மிகவும் பொதுவானது, பல இடங்களில் மின்சாரம் பாதி நாள் மட்டுமே வழங்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு உட்பட சில மாநில அரசுகள் மின் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்ததால் மின் விநியோக நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இத்தகைய வாக்குறுதிகள் அரசியல் லாபநோக்கத்துடன் செய்யப்படுகின்றன.2012-13ஆம் ஆண்டில் ரூ .3 லட்சம் கோடியாக இருந்த மின் விநியோக நிறுவனங்களின் நிலுவைத் தொகை, ஆறு ஆண்டுகளுக்குள் ரூ.4.8 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்த தலைவர்கள், நிதிச் சுமையை பற்றி கவலைப்படாததால் இதுபோன்று நடக்கிறது. மாநில அரசுகள் தங்களது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் அளித்தால் மட்டுமே மின் விநியோக நிறுவனங்களின் செயல்திறன் மேம்படும். பயனர்களுக்கு 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கும் அதே வேளையில், விவசாயத்துறைக்கு மின்சாரம் வழங்குவதற்கான நேரம் மாநில அளவிலான ஒழுங்குமுறை ஆணையங்களால் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு தொழில்துறை துறைக்கு மின்சாரம் வழங்குவது பற்றி என்ன கூறப்போகிறது?
மின்தடை காரணமாக உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்புகள் இழப்பதற்கும் காரணமாகி பல சமூக-பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று ஐநா வளர்ச்சி திட்டம் கூறிய வார்த்தைகள் இங்கே நினைவு கூரத்தக்கது. அனைத்து வேலை நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போதுதான் நாடு பிரகாசமான முன்னேற்றத்தை அடைய முடியும்.