நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தடையின்றி செயல்படுகின்றனர். சமீபத்தில், மும்பையில் ஒரு சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற பல சோதனைகள் கடந்த காலங்களிலும் நடத்தப்பட்டன. ஆனால் கடத்தல்காரர்கள், காவல்துறை மற்றும் சுங்க அலுவலர்களை ஏமாற்றுவதற்கு புதுமையான வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
கோவிட்-19 பரவ ஆரம்பித்ததிலிருந்து போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சுங்கத்துறையுடன் இணைந்து மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 191 கிலோ ஹெராயின் போதைபொருளை பறிமுதல் செய்தது. இந்த சரக்குகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக வந்திருந்தது.
ஹெராயின் பாக்கெட்டுகள், பாரம்பரிய மூலிகைகள் என்ற பெயரில் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முக்கிய இந்திய நகரங்களில் இதேபோன்ற பல மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், இது போன்று கடத்துவது என்பது தற்போதைய கடத்தலில் மட்டும் இல்லை. ஜனவரி மாதம், பஞ்சாப் காவல்துறையினர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 2,000 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட 200 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
அதிநவீன ட்ரோன்களின் உதவியுடன் சில கும்பல்கள் எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபட்டுள்ளன. இந்த கும்பல்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் ஆயுதங்களை கடத்த ட்ரோன்களை பயன்படுத்தின. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை (NCB) நிழல் இணையத்தில் பிட்காயின்களைப் பயன்படுத்தி போதைமருந்து வாங்கிய கடத்தல்காரர்களை கைது செய்தது.
அரசு அலுவலர்கள் தற்போது நடைபெற்று வரும் பொது சுகாதார அவசரகால செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தனித்துவமான கடத்தல் முறைகளைக் கண்டுபிடித்துள்ளன. மனநல நிபுணர்களின் கூற்றுப்படி, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மறையீடு செய்தி தளங்களில் இருந்து நிழல் இணையம் மற்றும் Deep Web நடவடிக்கைகளுக்கு மாறியுள்ளனர். மிக பழமையான போதைப்பொருள் தடை சட்டங்களும், NCBயின் வரம்புகளும் நாட்டின் போதைப்பொருள் கடத்தலை அதிகளவில் மோசமாக்குகின்றன. அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தியாவில் முக்கிய போதைப்பொருள் விற்பவர்களாக மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் உள்ளனர்
கடந்த 10 ஆண்டுகளில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 50 லட்சம் கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலளவு உள்ளத்தில் தற்போது பறிமுதல் செய்யப்பட்டது கையளவு மட்டுமே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிகாரபூர்வ எண்ணிக்கையின்படி, இந்தியர்களில் 15 சதவீதம் பேர் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் போதைப்பொருள் உபயோகத்தை தடுப்பதற்காக, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை மத்திய அரசு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. நாஷா முக்த் பாரத் பிரச்சாரம் போதைப்பொருள் உபயோகம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை இலக்காகக் கொண்டிருந்தாலும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, கலால் துறை மற்றும் அமலாக்க துறை போன்ற சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் போதைமருந்துகளுக்கு எதிரான கடுமையான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவை. சட்டவிரோத மருந்துகளை வைத்திருப்பது, இருப்பு வைத்திருப்பது, விநியோகிப்பது அல்லது வர்த்தகம் போன்றவை அபராதம், சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
இந்தியாவில், அதற்கான தண்டனை என்பது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும். இங்கு கடுமையான சட்டங்கள் இல்லாத நிலையில், பெரும்பான்மையான போதைப்பொருள் விற்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர். இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஆபத்தை அரசாங்கம் ஏன் புறக்கணிக்கிறது? அரசாங்கமும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து ஒரு சரியான முயற்சியை மேற்கொள்ளும்போது தான், போதைப்பொருள் அபாயத்தை நாம் தவிர்க்க முடியும்.
இதையும் படிங்க: இந்திய ரூபாயின் வீழ்ச்சி - நீங்கள் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!