ஏழை, பணக்காரன் என்ற பேதங்களைப் பேதலிக்கவிட்டு எல்லா விதமான மக்களையும் கோவிட்-19 அரக்கன் இரக்கமின்றி கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்களின் பலகீனத்தைப் பணமாக்கும் பந்தயத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கிடையே ஒரு கொடுரமான போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியான ஒரு செய்தி. கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவ சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்குமாறு வழிசெய்வதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி வழிகாட்டுதல் நெறிகளை வரையறை செய்யும் சாத்தியத்தை ஆராயுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசிற்கு ஆணையிட்டது.
சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலையீட்டினால் பல மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டு வந்தன. தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் கட்டண விகிதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட பல பொதுநலன் வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் சாதகமாகவே செயற்பட்டன. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தெலங்கானா உயர் நீதிமன்றம் அரசின் கட்டண விதிகளை மீறிய தனியார் மருத்துவமனகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில அரசிற்குக் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நீதிமன்றங்களின் ஆணைகளினால் எந்த நற்பலனும் நடந்திடவில்லை.
தனியார் மருத்துவமனைகளின் சுரண்டலும் கொள்ளையும் எல்லை மீறிப் போனதால், தெலங்கானா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் அஸோஸியேஷனுடன் கலந்து பேசி கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கொண்டு வருமாறு தெலங்கானா உயர் நீதிமன்றம் மீண்டும் அந்த மாநில அரசிற்கு ஆணை இட்டது. ஆந்திரப் பிரதேச அரசாங்கம் மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் மறுக்கும் விசயத்தை மிகக் கடுமையாக பார்க்க விரும்புகிறது. தெலங்கானா உயர் நீதிமன்றம் மருத்துவமனைகள் மீதான புகார்க் குழுக்களுக்குப் புத்துயிர் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்பே ரூபாய் ஒரு லட்சத்தை முன்வைப்புநிதியாகக் கட்டிவிடும்படி வெளிப்படையாகவே சொல்லி விடுகின்றன. ஒவ்வொரு நோயாளியிடமிருந்தும் ரூபாய் இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை பணத்தைக் கறாராகக் கறந்து விடுகின்றன. இது நிச்சயமாக ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடு தான். தனியார் மருத்துவமனைகள் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை விட நல்ல தரமான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது; அதனால் உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் பணபலம் இல்லாத மக்கள்கூட நோயென்று வரும்போது தனியார் மருத்துவமனைகளிடமே தஞ்சம் அடைகின்றனர். இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தப் ’பணத்துவமனைகள்’ இடைத்தர்களின் உதவியுடன் தங்களுக்குளே சில ரகசிய செல்வாக்கு குழுக்களை உருவாக்கிச் செயல்படுகின்றன. சாதாரண மக்களுக்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற வசதிகளை அனுமதிக்க மறுத்தல், மருத்துவமனைச் செலவுகளுக்கான தொகையைச் செலுத்தாதபட்சத்தில் பிணங்களை ஒப்படைக்க மறுத்தல் போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களுக்காகவே அபகீர்த்தியைச் சம்பாதித்து வைத்திருக்கின்றன தனியார் மருத்துவமனைகள். லாபம் சம்பாதித்தல் என்ற ஒற்றையான நிர்வாண நோக்கத்தையே அவை வெளிப்படுத்துகின்றன.
மருத்துவ சேவை என்பது லாபத்தை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் ஒரு வியாபாரம் அல்ல. தரமான, அதே சமயத்தில் அதிகச் செலவில்லாத மருத்துவ சிகிச்சை என்பதும் குடிமக்களின் சுகாதார உரிமையின் ஒருபகுதிதான் என்று சொல்லிய உச்ச நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கொள்ளையான சிகிச்சைக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆணித் தரமாகவே கூறி இருக்கிறது. இதற்கிடையில் மாநில அரசுகள் தாங்களாகவே நிர்ணயித்த கட்டண அமைப்பு லாபகரமானது அல்ல என்று மருத்துவமனை நிர்வாகங்கள் முன்பு தெளிவாகவே சொல்லியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் இப்போதைய தேவை ஒரு நியாயமான சிகிச்சைக் கட்டண அமைப்பை வடிவமைக்கும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான்.
தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கேரளா அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் பாராட்டி உள்ளது. எனினும் கேரளா தனியார் மருத்துவமனைகளின் சங்கங்கள் அரசின் நடவடிக்கைகளுக்குத் தங்கள் ஆட்சேபங்களைத் தெரிவித்திருக்கின்றன. தனி அறைகள், ஆடம்பரமான படுக்கை அறைகள், சுகாதாரக் காப்பீட்டின் பயனாளர்கள், மற்ற நோய்களினால் சிரமப்படும் நோயாளிகள் ஆகிய விசயங்கள் சம்பந்தமான கட்டண விகிதங்களில் இன்னும் தெளிவான கொள்கைகள் வேண்டும் என்று அந்தச் சங்கங்கள் சொல்லி இருக்கின்றன.
பெரிய மாநகரங்களின் மருத்துவமனைகளில் ’அவசர சிகிச்சைக்கென்று ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் அந்த வசதிக்காக நாளொன்றுக்கு ரூ.18,000 மட்டுமே தங்களால் கொடுக்க முடியும் என்று சொல்கின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ஒரு தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டிய பொறுப்பு நடுவண் அரசிற்கு இருக்கிறது. அதனால் மருத்துவமனை நிர்வாகங்களுக்கும், சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பை நிகழ்த்தி பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டால் தான், மருத்துவச் சேவையை நாடும் துரதிர்ஷ்ட நிலையில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு ஆறுதல் கிட்டும்.