அறிவு பொருளாதாரத்தில், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியில் அதன் முதலீடு மற்றும் உத்திகளுடன் தொடர்புடையது. மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) அதிகரிப்பது, இளைஞர்களின் திறனை வெளிக்கொணர்வது, நாட்டை முழுமையாக வளர்ந்த தேசமாக மாற்றுவது போன்றவற்றுக்கான தீர்வு, வாய்ப்புகளை அதிகரிப்பதிலும், பட்டங்கள் வழங்குவதில் உத்திகளை மேம்படுத்துவதிலும் மற்றும் கற்பித்தல் கற்றல் வழிமுறைகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதிலும்தான் உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை (NEP) மூலம் கல்வி முறையை மாற்றியமைக்க இந்திய அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்க செயலாகும். டாக்டர் கஸ்தூரிரங்கனின் வழிகாட்டுதலில், மிகவும் சிறந்த கல்வியாளர்களால் ஒரு நீண்ட ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு, இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நீண்ட காலம் வழங்கப்பட்டிருந்தது. இறுதியாக, இந்த கொள்கை மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தாமதமானது ஆனால் மறுக்கப்படவில்லை:
பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட ஒரு நாடு அதன் கல்விக் கொள்கையை சிறப்பாகச் செயல்படுத்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று நம்புவது கடினம். இந்தக் காலகட்டத்தில், உலகம் முழுவதும் பல விஷயங்கள் மாறிவிட்டன. கணினி சார்ந்த தொழில்நுட்பங்களில் அதிக சார்பு, சக்திவாய்ந்த தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு வசதியான பயணம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இளைஞர்களின் மாறிவரும் அணுகுமுறைகளால் தவிர்க்க முடியாத மாற்றங்கள் அரசால் விமர்சன ரீதியாக அளவிடப்படுகிறது. தற்போதைய தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறந்த கல்விக்காக இந்திய இளைஞர்கள் பிற நாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கத்துடன், அரசு இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது.
பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழக அளவில், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும். பள்ளி அளவில் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி மூலம் கல்வியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது முக்கியமானது. இதை முடிந்தால் உயர் வகுப்புகளுக்கும் அரசு விரிவுபடுத்த வேண்டும்.
பல மாநிலங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள இடைநிலைக் கல்வி முறை என்பது இப்போது பள்ளி கல்வியின் ஒரு பகுதியாகவே மாறும். பல சிறிய நாடுகள் தங்கள் தாய்மொழியில் கற்பித்தல் முறையை ஊக்குவிப்பதன் மூலம் பெரிதும் பயனடைந்துள்ளன.
ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா, சீனா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்த நாடுகளின் ஆராய்ச்சி பங்களிப்புகள் பல நாடுகளை விட முன்னணியில் உள்ளன. இத்தகைய அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்பது முக்கியம்.
உயர் கல்விக்கு அங்கீகரிக்கப்பட்ட பயனுள்ள மாற்றங்கள்:
உயர் கல்விக்கு இந்தக் குழுவால் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் கற்பவருக்கு மகத்தான மற்றும் முன்னெப்போதும் கண்டிராத நெகிழ்வுத்தன்மையை அளிக்கும். இளங்கலை பட்டப்படிப்பு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகவோ மற்றும் முதுகலை பட்டப்படிப்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாகவோ இருக்கலாம்.
ஆர்வமும் ஊக்கமும் உள்ள மாணவர்கள் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் முடித்த பின் நேரடியாக முனைவர் பட்டத்திற்கான படிப்பில் சேர முடியும். அதே சமயம், நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகளின் மூலம் ஒரு அறிக்கையை எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஒரு ரிப்போர்டை எழுத நிறைய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படுகிறது.
அதிக அளவிலான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவது காரணமாக மாணவர்களுக்கு அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிறுவனத்தில் மட்டுமல்லாமல், பிற கல்வி நிறுவனங்களிலும் அந்த குறிப்பிட்ட பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போதுள்ள அமைப்பிலிருந்து புதிய கல்விக் கொள்கைக்கு ஒரு பெரிய வித்தியாசம். இது இளைஞர்களுக்கு கனவாக இருந்த ஒன்று. தடையற்ற நெகிழ்வுத்தன்மை படிப்பின் ஒரு பகுதியை அல்லது முழு படிப்பையும் ஆன்லைனில் முடிக்க அனுமதிக்கிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் மையங்களை உருவாக்குதல்
பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படாத தன்னாட்சி கல்லூரிகளை ஊக்குவித்து, வலுவான கல்வி மையங்களை உருவாக்குவதற்கான அரசின் நோக்கம் புதிய கல்விக் கொள்கை மூலமாக கொண்டுவரப்படுகிறது. ஒரு கல்வி நிறுவனம் தன்னாட்சி பெற, அதற்கு அதிக அங்கீகாரப் புள்ளிகள் இருக்க வேண்டும்.
தரம், நல்ல உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல்-கற்றலில் ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்கள் மட்டுமே அதிக அங்கீகார புள்ளிகளை பெற முடியும். இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் ஏற்கனவே நிரூபித்துள்ள நிறுவனங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னாட்சியுடன் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன.
சிறப்பான நிறுவனங்கள் (IoE) திட்டத்தின் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு இது போன்ற அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களுக்கு இணையாகவும், நாலந்தா மற்றும் தக்சசீலா காலத்து இந்தியாவின் நற்பெயரை மீண்டும் பெறுவதற்குமான இலக்குடன் சிறப்பான நிறுவனங்கள் என்ற சான்று வழங்கப்படுகிறது.
கோவிட்-19 நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும்
புதிய கல்விக் கொள்கை அளிக்கும் ஊக்கத்துடன், கோவிட்-19 தொற்று நோய் காலத்தை ஒரு வாய்ப்பாக அரசு பார்க்க வேண்டும். கோவிட்-19 உலகெங்கிலும் பல கல்வித் திட்டங்களைத் தொடர்ந்து முடக்கி இந்த கல்வியாண்டைப் முடக்கப் பார்க்கிறது.
கல்வி நிறுவனங்கள், தங்கள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அதிகரிப்பதன் மூலம் கற்பவர்களுக்கு, உலகில் எங்கிருந்தும் கற்பதற்கான தடையற்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும். இத்தகைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், 2035க்குள் 50% GERஐ அடைய வேண்டும் என்ற கனவு, அதற்கு முன்னரேகூட அடையப்படலாம்.
பெரிய அளவிலான ஆன்லைன் கல்விக்கு பொருத்தமான உள்ளடக்கங்களை உருவாக்க பல லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பாடத்தின் உள்ளடக்கம் மற்றும் நடத்துவதில் எந்த சமரசமும் இல்லாத தொலைநிலை ஆசிரியராக இருப்பதற்கு, தங்களை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும் நோக்கத்தில் இந்திய அரசால் நன்கு திட்டமிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டது பாராட்டுக்குரியது. புதிய கல்விக் கொள்கையை இந்தியாவுக்கு ஒரு உண்மையான பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான அரசின் உறுதிப்பாடாக கருத வேண்டும். புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் ஆரம்பகால நன்மைகளை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையில் அடிப்படை இலக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!