தேசம் முழுவதும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலைகள் சாமான்ய மனிதனை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலைகள் மொத்தம் 24 படிநிலைகளில் உயர்ந்து விட்டன. கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு (பிப்ரவரி 21) முந்தைய 12 நாட்களில் தொடர்ச்சியாக விலைகள் ஏறியிருக்கின்றன.
ஏற்கனவே கோரதாண்டவம் ஆடிய கோவிட்-19 என்னும் அகில உலகத் தொற்றுப் பரவலால் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறது. இதன் பின்னணியில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலையுயர்வு பொதுஜனங்களின் அவலத்தை மேலும் மோசமாக்கி விட்டது. இந்த விலையுயர்வு சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை மீளமுடியாத அளவுக்கு மேற்கொண்டு சிக்கலில் தள்ளிவிட்டது.
விலைகளைக் குறைப்பது மட்டுமே மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும் என்பதை ஒத்துக் கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பிரச்சினையில் தான் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அகில உலகச் சந்தையோடு தொடர்புடையவை என்பதால், விலைகளைக் கட்டுப்படுத்துவது என்பது தனது அதிகார வரம்பிற்குள் இல்லை என்று கூறியிருக்கிறார். விலைகளை நியாயமான எல்லைக்குள் கொண்டு வருவது சம்பந்தமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்லி விட்டார்.
பெட்ரோல் விலையைத் தினப்படி மாற்றிக் கொள்வதற்கு 2017-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு பச்சைக் கொடி காட்டி விட்டது. ஆனால் உலகச் சந்தைகளைப் பற்றி அது வெறும் பாதி உண்மைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் கச்சா எண்ணெய் விலை கோவிட் உலகத் தொற்றுப் பரவலால் நிகழ்ந்த தேவைக் குறைவால் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அதன் விளைவாக பெட்ரோல் விலையை இந்தியா குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகள் விதித்த சுங்க வரிகளால் பெட்ரோல் விலை உயர்ந்தது.
கோவிட்-19 தாக்குவதற்கு முன்புவரை பெட்ரோல் மீதான மத்திய அரசின் சுங்கவரி ரூபாய் 19.98. கரோனா காலத்தில் சுங்கவரி ரூபாய் 32.98-ஆக உயர்த்தப்பட்டது. அதைப் போல, டீசல் மீதான சுங்கவரி ரூபாய் 15.83-லிருந்து ரூபாய் 31.83-க்கு ஏறியது. மாநிலங்களும் சுங்கவரிகளை விதிப்பதில் தங்களின் பங்கை ஒழுங்காக நிறைவேற்றின.
நம் நாடு தனது கச்சாப்பொருள் தேவைகளின் 89 விழுக்காட்டைச் சமாளிக்க இறக்குமதிகளையே சார்ந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு மக்கள் ஓரளவு தியாகம் செய்ய தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே போல், தனக்குத் தேவையான எல்பிஜி-யில் (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) 53 சதவீதத்தை நாடு இறக்குமதி செய்கிறது. மக்கள் அதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் தற்போதைய பொருளாதாரச் சிக்கல் நிலையின் பின்னணியில் தங்களுக்கு எதிராக நிகழும் ஏமாற்று வித்தையைத்தான் அவர்கள் குறைசொல்கிறார்கள்.
நாடாளுராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெட்ரோல் விலை அன்னை சீதாதேவியின் பிறந்த இடமான நேபாளத்திலும், ராவணனின் பூமியான இலங்கையிலும் இருப்பதைவிட இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
தேசங்களுக்கு இடையிலான பெட்ரோல் விலை மாற்றங்கள், வித்தியாசங்கள் இயல்பானவை என்றும், மக்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள், சம்பந்தப் பட்ட அரசுகள் விதிக்கும் சுங்கவரிகள் போன்ற காரணிகளைச் சார்ந்ததுதான் விலை என்றும் மத்திய மந்திரி சொல்கிறார். மந்திரி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; இதுவரை இல்லாத பேரளவில் இப்போது பெட்ரோல் விலை ஏறிவிட்டது. ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் என்பது சாமான்யமான விலையுயர்வு அல்ல. தாங்கக் கூடியதுமல்ல.
காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முன்னேற்ற அணியின் அரசாங்கத்தில் பெட்ரோலிய எரிபொருட்களின் மீதான சுங்கவரிகள் 51 விழுக்காட்டில் இருந்தன. இன்று சுங்கவரிகள் 64.9 சதவீதத்திற்கு ஏறிவிட்டன. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014-ல் ஆட்சியைப் பிடித்தபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71-ஆக இருந்தது. அப்போது டீசலின் விலை ரூபாய் 57. கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய்க்கு 110 அமெரிக்கன் டாலர். கச்சா எண்ணெய் இப்போது அமெரிக்கன் டாலர் 65-க்கு இறங்கிவிட்டது.
தர்க்க விதிகளின் படி இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருட்களின் விலைகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? இப்போது பெட்ரோல் விலை 2014-ல் இருந்ததை விட 28 சதவீதமும், டீசல் விலை 42 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன என்பது நல்லதொரு நகைமுரண். கட்டுக்கடங்காமல் தாறுமாறாய் உயர்ந்திருக்கும் சமையல் எரிவாயுவின் விலையால் ஒவ்வொரு இல்லத்து நிதி நிலைமையும் தீப்பிடித்து எரிகிறது.
எரிபொருள் சார்பிலிருந்து தேசத்தை விடுவிக்காமல் போன கடந்தகால அரசின் தோல்வியின் எதிரொலிதான் தற்காலத்து மோசமான நிலை என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நியாய வரம்புக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியும், முனைப்பும் அவர் எடுக்கத்தான் வேண்டும்.
சமையல் எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான கடமை தனது அரசிற்கு இருக்கிறது என்று மோடி கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலைகளையும் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நெடுநாளைய கோரிக்கையை அவர் நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்பு, கோவிட்-19 உலகத் தொற்றுப் பரவலால் உண்டான சிக்கல் நிலையைச் சமாளிப்பதற்கு என்று கொண்டுவந்த சுங்க வரிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஐந்து டிரில்லியன் டாலர் (ஐந்து லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரம் என்ற கனவை நிறைவேற்ற, எரிபொருட்களின் விலைகளை ஒரு நியாயமான நிலைக்குக் கொண்டுவந்து ஒழுங்குப் படுத்துவது மத்திய அரசின் கடமை. மாநிலங்களும் மத்திய அரசு செய்வதைப் போல செய்ய கடமைப் பட்டிருக்கின்றன.