பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் இந்தியா-சீனா உறவைப் பற்றிப் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்: “கடந்த 2,200 ஆண்டுகளாக, நமது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பேணிக் காப்பதற்காக சுமார் 99.9 விழுக்காடு நேரத்தை நாம் அர்ப்பணித்திருக்கிறோம்” சீனப் பிரதமர் மறைமுகமாகக் குறிப்பிட்ட மிச்சமுள்ள 0.1 விழுக்காடு என்பது இந்தியாவுக்கு எதிராக சீனா தொடுத்த 1962-ஆம் ஆண்டுப் போர். இரண்டு நாடுகளுக்கு இடையில் இருந்த பஞ்சசீலக் கொள்கையின் ஆன்மாவை அப்பட்டமாகக் கீழேப் போட்டு மிதித்து சீனா செய்த அராஜகம் அது.
வூஹான் மாநாட்டிலும், மஹாபலிபுர மாநாட்டிலும் இரண்டு நாட்டு தலைவர்கள் ஒரு நட்புணர்வை வெளிப்படுத்தினார்கள் என்றாலும், எல்லைகளைச் சுற்றிக் கனத்த போர் மேகங்கள் பற்றிப் படரும் வண்ணம், சீனா வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்ட படைபலத்தைக் குவித்தது. கடந்த பல மாதங்களாக எடுக்கப்பட்ட தீவிரமான முயற்சிகளின் பலனாக, ஓர் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது சந்தோசமான நிகழ்வுதான். இந்தியாவிடமிருந்து சர்ச்சையான எல்லைப் பகுதிகளைப் பிடுங்கிக் கொள்வதற்காக சீனா செய்த தந்திரமான முன்னகர்வுகளை இந்திய ராணுவம் உடனடியாக முறியடித்து சீனா மட்டம் தட்டியது. சீனாவின் அராஜகப் போக்கை எதிர்த்து இந்திய ராணுவம் மலைப்பகுதிகளை தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்தது.
பரஸ்பர ஒத்துழைப்போடு இரண்டு நாடுகளும் மெல்ல மெல்ல தங்கள் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. சமீபத்திய ஒப்பந்தம் மே மாதம் முதல் வாரத்திற்கு முந்தி எல்லைப் பகுதிகளில் நிலவி இருந்த சூழலை மீட்டெடுத்துக் கொணரும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கையோடு கூறியுள்ளார். ஓர் அங்குலம் நிலம் கூட சீன அராஜவாதிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் சொல்லி இருக்கிறார். பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குக் கரைகளில் இரண்டு பக்கத்து நிலைகள் உறுதி செய்யப்படும் வரை, இரண்டு நாடுகளின் கண்காணிப்பு நடமாட்டங்கள் நிறுத்தப்படும்.
எனினும், சொந்தப் பிராந்தியம் என்று கருதப்படும் தன் எல்லைப்பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பு நடமாட்டத்தை நிறுத்த சம்மதித்ததின் மூலம், அது ராணுவ பலம் கொண்ட முக்கியமான தனது இடங்களை இழந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளலாம் என்று சீனா-இந்தியா உறவு விவகாரங்களின் நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். சீனா 18 அண்டை நாடுகளுடன் எல்லைச் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசம். சீனாவின் விரிவாக்கத் தந்திரோபாயங்களைப் பற்றி நன்கறிந்த நிபுணர்கள் அந்த நாட்டின் கள்ளங்கபடமிக்க உள்நோக்கங்களுக்கு இந்தியா பணிந்துவிட வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எச்சரிக்கைகளை அலட்சியப் படுத்திவிட முடியாது.
2013 மார்ச் மாதத்தில் சீனப்பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜி ஜின்பிங் இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஒரு புதிய பஞ்சசீலக் கொள்கையை முன்மொழிந்தார். பரஸ்பர உறவைச் சரியான பாதையில் கொண்டு செல்ல உயிர்நாடி விவாதங்களைத் தொடர வேண்டும் என்பது அந்தக் கொள்கையின் முதன்மையான அம்சம். 1962-லும், 2020-லும் சண்டையைத் தொடங்க முனைந்தது சீனாதான். ஆனால் இரண்டு தடவையும், போராட்டம் என்னும் கனத்த பனிமூட்டத்தை நீக்கும் நோக்குடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இந்தியா மட்டுமே.
முன்னாள் பிரதம அமைச்சர் ராஜீவ் காந்தி 1988-ல் செய்த சீன விஜயம் எல்லைச் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒன்றுபட்ட செயல் குழுவை உருவாக்க உதவியது. பிவி நரசிம்ம ராவ்வின் ஆட்சியின் போது இரு நாடுகளுக்கிடையே சமாதானத்தையும், நல்லெண்ணத்தையும் வளர்த்தெடுக்க மேலும் பல முயற்சிகள் பலமாக எடுக்கப்பட்டன. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எல்லைப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இரு தேசங்களின் பரஸ்பர தொழிலை மேம்படுத்தவென்று ஒரு குழு அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளின்போது என்னதான் நல்லுறவு பற்றி நம்பிக்கை வார்த்தைகள் பேசப்பட்ட போதும், சீனா ஒருபோதும் அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுப்பதே இல்லை. மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பலமான கப்பற்படைத் தளங்களைக் கொண்டிருப்பதால், சீனா இந்தியாவின் கழுத்தைச் சுற்றி கயிற்றைப் போட்டு இறுக்கப் பார்க்கிறது.
இந்திய-பசிபிக் பெருங்கடல் பிரதேசத்தில் சீனா கொண்டிருக்கும் அராஜகத் தலைமை உணர்வை முறியடிக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்டிரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து விட்டன. இது வெளிப்படையாகவே சீனாவை எரிச்சலுக்கு ஆளாக்கியது. சீனாவை அதன் எல்லைகளுக்குள்ளே மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடரும் அதே வேளை, பரஸ்பரத் தொழில் உறவைத் தொடர இந்தியா நடைமுறைப் பூர்வமான, சாணக்கியத்தனமான உத்தியை மேற்கொள்ளவேண்டும். சுணங்கிப் போய்விட்டால் எவ்வளவு ஆபத்து என்று பலமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. அதனால் அந்த டிராகனைக் கட்டுப்படுத்த இந்தியா தனது ராஜதந்திர உபாயங்களை மேலும் கூர்தீட்ட வேண்டியது மிகமிக அவசியம்.