ஸ்மார்ட்போன் மற்றும் டிவி வசதிகள் இல்லாததன் காரணமாக கல்வி பெறுவதில் இருந்து ஏழை மாணவர்கள் விலகி இருக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தொலைகாட்சிகளின் வழியே பாடங்கள் எடுக்கின்றனர். மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்வதற்கு மொபைல் போன்களையே நம்ப வேண்டி இருக்கிறது. மொபைல் வழியேதான் தங்களது சந்தேகங்களைக் கேட்கின்றனர். இதுபோன்ற சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஸ்மார்ட்போன்கள் வாங்குகின்றனர். இன்னும் சிலர் டி.வி வாங்குகின்றனர். அவர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ குழந்தைகளின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர்கள் தொடர் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
இதற்கும் மேலாக, விரைவான டேட்டாவை பெறுவதற்கு இணைய சிக்னல்கள் பெறுவதற்கு மரங்களிலும் மேடான பகுதிகளிலும் ஏறுபவர்களின் போராட்டங்கள் சமீபகாலமாக நாம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். "கல்வித்துறை உத்தரவின்படி வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வீட்டுப்பாடங்கள், உத்தரவுகள் மற்றும் யோசனைகளை அனுப்புகின்றோம். மாணவர்கள் வீட்டுப்பாடத்தை செய்து, விடை அளித்த தாள்களை போட்டோ எடுத்து திரும்ப அனுப்பும்படி சொல்கின்றோம். 7-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி முக்கியமானது.
இதன்காரணமாகத்தான் இந்த மாணவர்களின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்காக ஸ்மார்ட் போன்கள் வாங்க வேண்டி இருக்கிறது," என பல ஆசிரியர்கள் ஈநாடு நாளிதழிடம் கூறினர். டிவி அல்லது ஸ்மார்ட் போன்கள் பெற இயலாதவர்கள் பாடங்களில் இருந்து விலகி இருக்கின்றனர் என மேலும் அவர்கள் இது குறித்து கூறினர். ஏழைகள், நடுத்தர, நடுத்தரவர்க்கத்துக்கும் கீழே உள்ள குடும்பங்களுக்கு இது தாங்க முடியாத சுமை என்றும், ஏற்கனவே அவர்களில் பலர் கரோனா காரணமாக வேலை இழப்பை சந்தித்திருக்கின்றனர் என்றும் ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் அறிந்தே இருக்கின்றனர்.
இது எரிகிற நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றுவது போன்றது என்ற பழமொழியை நினைவூட்டுவதாகக் கூறப்படுகிறது. போதுமான வேகம் இன்மை மற்றும் இணைய சிக்னல் கிடைக்காதது போன்ற தொழில்நுட்ப பிரச்னைகளால் மாணவர்கள் மரங்கள் மீதும் மேடுகள் மீதும் ஏறி கொண்டு போராடுகின்றனர்.
சில பள்ளிகளில் கீழ்கண்ட சூழல்கள் ஏற்பட்டுள்ளன
அடிலாபாத் மாவட்டம் உட்னூரு ஜில்லா பரிஷித் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு ஏ பிரிவில் 32 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 17 பேரிடம் மட்டுமே ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. அவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே இந்த மாதத்தின் முதல்வாரத்தில் ஸ்மார்ட் போனை வாங்க முடியும்.
அசிபாபாத் மண்டலம் கொமாராம் பீம் மாவட்டத்தில் கெர்மேரி மண்டலில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இங்கு 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளில் 204 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 30 மாணவர்கள் இந்த மாதத்தின் முதல் தேதிக்குப் பின்னர் புதிய ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கின்றனர். இந்த மொபைல் போன்களை வாங்க முடியாதவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தொலைகாட்சியில் கல்வி நிகழ்ச்சிகளைப் பார்த்து படிக்கின்றனர்.
மெட்சால் மாவட்ட கெஜடட் தலைமை ஆசிரியர்கள் அசோசியேஷனின் தலைவர் முரளிகிருஷ்ணா, ரோட்டரி கிளப்பின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு, உறுப்பினர்களின் கவனத்துக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்தார். மெட்சால் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் மொபைல்போன் இருந்தபோதிலும் இணைய இணைப்பு ரீசார்ஜ் செய்யப்படவில்லை என்று தெரிந்தது. அதன்பின்னர், ரோட்டரி கிளப் சார்பில் கவ்கூர் உயர்நிலைப்பள்ளியில் 40 மாணவர்களின் போன்களுக்கு மூன்று மாதத்துக்கான இணையதள டேட்டா ரீசார்ஜ் செய்யப்பட்டது.
அடிலாபாத் கிராம மண்டலத்தில் அங்கோலி உயர் நிலைப்பள்ளியில் 327 மாணவர்களில் 37 மாணவர்களுக்குத் தொலைகாட்சி பெட்டிகள் இல்லை. இவர்களில் 151 மாணவர்கள் மட்டுமே போன்கள் வைத்திருந்தனர்.
தினக்கூலிகளால் ஸ்மார்ட்போன்கள் வாங்கமுடியவில்லை
அடிலாபாத் மாவட்டம் இந்தரவெளி அருகே லாலா முட்நூரில் வசிக்கும் கங்கா மற்றும் அவரது மூன்று மகன்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த சிறுவர்கள் முறையே 4, 6 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கின்றனர். கணவன் உயிரிழந்து விட்ட நிலையில், தாய் மட்டுமே மொத்த குடும்ப பாரத்தையும் தாங்குகிறார். கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார். அந்த வீட்டில் டி.வி ஏதும் இல்லை. அவர்களால் ஒரு ஸ்மார்ட் போன் கூட வாங்க முடியாது. இப்போது மூன்று குழந்தைகளும் ஆன்லைன் பாடம் கற்க முடியாமல் விலகி இருக்கின்றனர்.
டிவி- பாடங்களையும் படிக்க முடியவில்லை. "ஆரம்பத்தில் நான் பக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்களின் டிவி-யில் பாடங்களைக் கேட்டேன்.அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு வயல் வேலைக்குப் போய்விடுகின்றனர். எனவே நான் அப்போது வரை படித்த பாடங்களையும் கைவிட வேண்டியதாக இருக்கிறது," என்கிறான் கங்காவின் மூத்த மகனான லட்சுமிகாந்த், ஈநாடுவிடம்.
கரீம்நகர் மாவட்டம் கங்காத்கர் மண்டல் ஒடியாரத்தில் உள்ள சிரா சிவராம் என்ற மாணவன், அரசு பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கின்றான். அவனுடைய தந்தை ஒரு கூலித் தொழிலாளி. அவனுடைய தாய் உடல்நலக்குறைவாக இருக்கிறார். "என் தாய்க்கு மருந்து வாங்குவதற்கு குடும்ப செலவுகளுக்குக் கூட என் தந்தையின் வருமானம் போதவில்லை. இ்ந்த காரணங்களால் நான் ஒருமாதம் துறைமுகத்தில் மணல் சுரங்கப்பணிக்குச் சென்றேன். அதை வைத்து ரூ.7,700-க்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினேன்," என்றான்.
கடன் மூலம் ஸ்மார்ட் போன்
மொபைல் போனில் டிஜிட்டல் வகுப்புகளைக் கேட்கும் இந்த மாணவனின் பெயர் போது அருண். மாகாபூபாபாத் மாவட்டம் குடூர் மண்டலம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த இவன், தீகலவேனி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கின்றான். அவர்களின் குடும்ப நிதி நிலைமை ஒத்துழைக்காவிட்டாலும் கூட, அவனுடைய தந்தை மார்கய்யா என்ற ஆடு மேய்ப்பவர் , 8500 ரூபாய் கடனாக வாங்கி இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
15 நாட்களின் சுமை என்பது ரூ.70 கோடி
மூன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஜூலை மாதம் 1-ம் தேதியில் இருந்து டிஜிட்டல் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்துறையின் புள்ளி விவரத்தின்படி அந்த நாளில் இருந்து 1,91,768 பேர் மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிகணினிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் 27,517 பேர் கூடுதலாக சேர்ந்ததை அடுத்து ஆன்லைன் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 2,19,285 ஆக உயர்ந்தது.
இந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது. கடந்த 15 நாட்களில் மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் 10 லட்சம் ஸ்மார்ட் போன்களாவது வாங்கியிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வமற்ற தோராயமான ஒரு மதிப்பீட்டில் கூறப்படுகிறது. ஒரு ஸ்மார்ட் போன் விலை ரூ.7000-ம் என்று கணக்கிட்டால், இந்த 15 நாட்களில் மட்டும் மொபைல் சந்தையில் 70 கோடி ரூபாய்க்கு மொபைல்போன் வாங்கப்பட்டிருக்கிறது.