ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும், அடிப்படை சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள தற்போதைய ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்க - நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிலி நாடுகளிடமிருந்து கிடைத்துள்ள அனுபவங்கள், நோயின் தீவிரத்தையும் இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்த - தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மத்திய அரசு, ஜனவரி 16 ஆம் தேதி தனது தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த கட்டமாக அதனை விரிவுப்படுத்தியது. மேலும் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் நாளை (மே ஒன்றாம் தேதி) முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவித்துள்ளது. 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்யும் அதே நேரத்தில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 60 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு ஏற்கவில்லை. சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவியை அறிவித்துள்ளது. ஆனால், அதே வேளையில், இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் பாதியை தங்கள் சொந்தக் கணக்கில் வைத்துக்கொண்டு, அதற்கான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்து - அந்த தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்கலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 14.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனாலும், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் சேர்த்து போட்டுக்கொண்டுள்ளனர். தொற்றுநோய் பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால், நாளை (மே ஒன்றாம் தேதி) முதல் தடுப்பூசிக்கான தேவை அதிவேகமாக அதிகரிக்கப் போகிறது. மருந்து நிறுவனங்களோ - தடுப்பூசிகள் வழங்குவதை ஒரே இரவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால், மாநில அரசுகள் கடுமையான அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது, இது பெரும் குழப்பத்திற்கு கூட வழிவகுக்கும்.
கரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் ரூ. 35,000 கோடியை ஒதுக்கியிருந்தது. அதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ரூ .10,000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும். “குடிமக்களுக்கு தடுப்பூசி போட எவ்வளவு பணத்தையும் செலவிடத் தயங்க மாட்டோம்” என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது அந்த வார்த்தைகளை மறந்துவிட்டு, மாநில அரசுகளுக்கு 48,000 கோடி ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்த முயற்சிப்பது நியாயமான செயல் இல்லை. இலவச தடுப்பூசி வழங்குவதற்கான பொறுப்பை 20 மாநிலங்களின் அரசுகள் தங்கள் தோள்களில் ஏற்றுக் கொண்டாலும், பல்வேறு காரணிகளால் தங்களின் வாழ்வாதார உரிமைகளை இழக்கும் மக்களின் எண்ணிக்கை – மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும்.
“எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் நிலை ஏற்படும்வரை - யாருக்கும் பாதுகாப்பு இல்லை” என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கையை நினைவுகூர்வது நல்லது.
இதன் காரணமாகவே, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குகின்றன. ஆனால் மத்திய அரசு பின்பற்றும் தடுப்பூசி வழங்கல் கொள்கை வளர்ந்த மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு இடையே மட்டுமின்றி சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும். கடந்த எழுபது ஆண்டுகளாக இந்தியா - நாடுதழுவிய இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு இடையே தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். கோவிட் பெருந்தொற்று பாதிப்பால், ஏற்கனவே மாநில அரசுகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. நடுத்தர வர்க்க மக்களோ, ஒருபுறம் கோவிட் பயம் மறுபுறம் வேலை இழப்பு ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் ஒவ்வொரு டோஸுக்கும், தற்போது அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.250 ஆகும். மே மாதம் (நாளை) முதல் அவற்றின் விலை ஐந்து மடங்கு அதிகரிக்கும். இது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் தீங்காக உருவெடுக்கும். மேலும், சுரண்டப்பட்ட மக்களின் சாபத்தைத் தூண்டுவதாகவும் இது அமையும். தடுப்பூசி விலையை குறைப்பதற்காக, ஸ்புட்னிக் வி, மடேர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாநில அரசுகளின் நிதி நிலை அனுமதிக்காது. முன் எப்போதும் இல்லாத - பொது சுகாதாரத்திற்கான இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமானால், முழு தடுப்பூசி திட்டத்தையும் மத்திய அரசே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தடுப்பூசியின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மக்களின் வாழ்வதற்கான உரிமையை’ இது பாதுகாக்கும்.