தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது ஒரு சுவாரஸ்யமான லட்சிய ஆவணமாகும். இது மாணவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்க முயல்கிறது. இந்தக் கொள்கையை வரையறுத்த குழுவின் சில உறுப்பினர்களைச் சந்தித்து விவாதித்த பின்னர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த கொள்கை வரையறுக்கப்பட்டதை உணர முடிகிறது. இது இயல்பானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதாகவுமே தெரிகிறது.
டாக்டர் கே.கஸ்தூரிரங்கன், புகழ்பெற்ற விஞ்ஞானியும் கல்வியாளருமான டாக்டர் எம்.கே.ஸ்ரீதர் மாகம் ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அக்குழுவிலேயே மிகவும் புதுமையான சிந்தனைகளை முன்வைத்தவர் பிரின்ஸ்டன் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த மஞ்சுல் பார்கவ் ஆவார்.
ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டின் எதிர்காலத்தில் திட்டமிடுவது என்பது, ஒரு குறிப்பிடத்தக்க லட்சிய முயற்சியாகும். எனவே, இதை சரியாக நிறைவேற்ற வளங்களை சரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் இதற்கு பலரது ஒத்துழைப்பும் தேவை.
ஒரு கொள்கை என்பது அது செயல்படுத்தப்படுவதைப் பொறுத்தே சிறந்ததாக இருக்கும்.
உயர் கல்வி
உயர் கல்வி என்று வரும்போது, இந்தக் கல்விக் கொள்கையில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் தனித்து நிற்கின்றன. முதலாவதாக, உயர் கல்வித்துறையில் உள்ள பாடப்பிரிவுகளை இந்தக் கல்விக் கொள்கை கூர்மையாக விமர்சிக்கின்றது.
நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்களில் படித்த நம்மில் பலருக்கு அங்குள்ள பாடப்பிரிவுகள் குறித்து தெரிந்திருக்கும். அதேபோல உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகளும் மாணவர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் வகையில்தான் தற்போது உள்ளது.
இது பிரட்டிஷ் அரசு கடைப்பிடித்துவந்த ஒரு கல்வி முறை. இந்தியர்களை குமஸ்தாக்களாக மாற்றவே இதுபோன்ற தேர்வுகள் சார்ந்த பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக, இந்த கல்வி அமைப்பு முறை இன்று வரை மாற்றப்படாமலேயே உள்ளது.
இதற்கிடையில், தற்போது உலகம் 21ஆம் நூற்றாண்டின் அறிவுசார்ந்த தலைமுறைக்குச் சென்றுள்ளது. இங்கு பல்கலைக்கழகங்களில் கணிதம், இசை, இலக்கியம் போன்ற துறைகள் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. சிலிக்கான் பள்ளத்தாக்கின் பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் இது காரணமாக அமைகிறது.
இந்தக் கல்விக் கொள்கை, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை படிக்க அனுமதிக்கிறது. இந்திய உயர் கல்வி முறை தற்போது 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப புதுமையான அறிவு, பொருளாதாரம் சார்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும் என்று நம்புகிறோம்.
ஆராய்ச்சியும் கற்பித்தலும்
பாடப்பிரிவுகள் மட்டுமின்றி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பாடதிட்டங்களும் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே காலனித்துவ மாதிரியில்தான் தொடர்கிறது. தற்போது கற்பித்தல் என்பது கல்லூரிகளிலும், ஆராய்ச்சி என்பது ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் என்பவர் வடிவமைத்த ஜெர்மன் கல்வி முறையில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் என இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி முறையை பின்பற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு 20ஆம் நூற்றாண்டில் இது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. வெகு சில பல்கலைக்கழகங்களைத் தவிர, நமது நாட்டிலுள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியும் கற்பித்தலும் தனித்தே இருந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தக் கல்வி முறையின் தேவையை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இது ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது.
ஒரே இடத்தில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த சிந்தனையை இந்தியாவில் நிறுவ, இங்குள்ள பேராசிரியர்களின் மனதை மாற்றியமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மிக உயர்ந்த மட்டத்தில் ஆராய்ச்சி முறையை மாற்றியமைத்தல் தேவைப்படுகிறது. இது எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கும்.
மேலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றாகவுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தேவைகளை இது நிறைவேற்றும்.
இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆராய்ச்சி மற்றும் ஆசிரிய வளர்ச்சியில் நாம் கணிசமான முதலீடுகளை செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இந்த விஷயத்தில் நம்மை ஏமாற்றவில்லை. இது புதிய கல்விக் கொள்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டில் ஆராய்ச்சி என்பது மோசமான நிலையில் உள்ளது. நமது நாட்டிலுள்ள முனைவர்கள் சிறந்த முறையில் இருப்பதில்லை என்று ஆண்ட்ரே பீட்டீல் என்பவர் தெரிவித்திருந்தார். எனவே இது காலத்தின் கட்டாயம். இருப்பினும், இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது. இது வெறும் நிர்வாக ரீதியான மாற்றமல்ல, ஒரு கலாசாரத்தையே மறுவடிவமைப்பு செய்யும் முறையாகவும். எனவே, இதில் எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்று கூறுவது கடினம்.
புதிய கல்விக் கொள்கை தரும் நெகிழ்வுத்தன்மை
தற்போது முன்மொழியப்பட்ட புதிய கல்வி கொள்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்றால் அதிலுள்ள நெகிழ்வுத்தன்மையும், விருப்பமில்லை என்றால் இளங்கலை பட்டப்படிப்புகளில் இருந்து வெளியேற வழங்கப்பட்டுள்ள வழிகளுமே ஆகும். பலேவறு பாடப்பிரிவுகளில் சிறப்பான பாடத்திட்டங்களை கொண்டிருக்கும் நான்கு ஆண்டு கால இளங்கலை கல்வி இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் இறுதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இளங்கலை படிக்கும்போது நான்கு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானலும் படிப்பில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம். இது மாணவர்கள் டிப்ளோமா, அட்வான்ஸ்டு டிப்ளோமா, மூன்று மற்றும் நான்கு ஆண்டு பி.ஏ. ஆகிய டிகிரிகளுடன் மாணவர்கள் வெளியேறும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இதிலும் சில ஆபத்துகள் உள்ளன.
ஆனால், இதுகுறித்து அதிகம் நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், முன்பு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் இருந்தாலும் எவ்வித டிகிரியும் இல்லாமல் வெளியேறும் சூழ்ல்நிலை இருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதி தவறாக உபயோகிக்கப்படாது என்று நம்புகிறோம்.
இந்தியாவில் வரவுள்ள வெளிநாட்டு பல்கலைகழகங்களின் வளாகங்கள்
இறுதியாக, புதிய கொள்கை சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் (முதல் 100 இடங்களில் இருக்கும் பல்கலைக்கழங்கள்) இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க அனுமதிக்கிறது. இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
அடிப்படையில் இந்திய உயர்கல்வியில் தாராளமயமாக்கல் என்பது நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், இதுகுறித்து இப்போது ஒரு சரியான கணிப்பை மேற்கொள்ள முடியாது.
இது மேற்கில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பெரும் முக்கியத்துவத்தை அளிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கு பல்கலைக்கழகங்கள் இப்போது நிதிசார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
சர்வதேச மாணவர்களின் சேர்க்கைதான் அவர்களின் வருவாயின் முக்கியமானதாக இருந்தது. இந்தச் சூழலில் இந்தியா போன்ற ஒரு பரந்த கல்விச்சந்தை உள்ள நாட்டில் சர்வதேச வளாகங்களை அமைப்பது என்பது குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுத்தரும்.
ஆனால் மிக முக்கியமாக, இது பல்கலைக்கழங்களில் புதிய வருவாய் கிடைக்க வழிவகுக்கும். சிங்கப்பூரில் உள்ள யேல்-என்யூஎஸ் (Yale-NUS) மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பல்வேறு வளாகங்கள் ஏற்கனவே இதற்கு குறிப்பிடத்தக்க முன் உதாரணங்களாக அமைந்துள்ளன. இந்திய உயர்கல்வியின் இந்த தாராளமயமாக்கல் குறித்து டைம்ஸ் உயர் கல்வி ஏற்கனவே ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
”இது உள்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? ஆரோக்கியமற்ற போட்டிகளை ஏற்படுத்துமா? மாணவர்களுக்கு பிரச்னையை அளிக்குமா? இது உயர் கல்வி குறித்த பொதுமக்கள் மனநிலையை மாற்றியமைக்குமா? அப்படி மாற்றியமைத்தால் அது யாரை பாதிக்கும்? ஒட்டுமொத்தமாக நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு இது என்ன புதிதாக வழங்குகிறது?”
இதுபோன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் நேரம்தான் பதிலளிக்கும். மிகச் சிறந்த எதிர்காலம் என்பதே நம் நாட்டின் தற்போதைய லட்சியம். ஆனால் அதற்கு நாம் மிகப் பெரிய விலையைத் தர வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: சோளம் – விவாசாயிகளின் சோகம்: குழி தோண்டும் உலக வர்த்தக அமைப்பு