டெல்லி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) ஒருங்கிணைத்த உலக உணவு தினம் நிகழ்ச்சி மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் நடந்தது.
உலக உணவு தினத்தைக் கொண்டாடும் ஒரு நிகழ்வை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் இன்று தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்வை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒருங்கிணைத்தது. இந்த ஆண்டு ‘வளர், ஊட்டமளி, நிலைநிறுத்து, ஒன்றிணைவோம்’ என்ற கருத்தை முன்னிறுத்தி நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
பெருந்தொற்று காரணமாக உலகமே எதிர்பாராத சவால்களைச் சந்தித்திருக்கும் சூழல் காரணமாக உணவு, நுண்ணூட்டச்சத்து, ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நிலைத்தன்மை ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யின் சரியானதை உண்ணும் இந்தியா இயக்கமானது, பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு என்பதை ஒவ்வொருவரும் சூழல் ரீதியாக நிலையான வழியில் முன்னெடுக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
இது அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான பாதுகாப்பான உணவு வழங்குவதை கட்டாயமாக்குவதன் ஒரு பகுதியாகும். இது நமது அனைத்து குடிமக்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. மேலும், உணவுப் பாதுகாப்பு சூழல்முறைகளை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
உணவு விநியோகச் சங்கிலியிலிருந்து கெட்ட கொழுப்புகளை நீக்குவதே இந்த ஆண்டின் முக்கியமான நோக்கமாகும். ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி எண்ணெய்களில் (வனஸ்பதி எண்ணெய் போன்றவை) உணவு நச்சு இருக்கிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் இந்தியாவில் தொடர்பற்று பரவும் நோய்களை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணிகளாகும்.
மேலும், “இதய நோய்களுக்கான மாறக்கூடிய அபாய காரணியாக கெட்ட கொழுப்புகள் இருக்கின்றன. இதய நோய்களுக்கான அபாய காரணிகளை நீக்குவது குறிப்பாக கோவிட் 19 தொற்று காலத்தில் அவசியமானதாகும். இப்போதைய காலகட்டத்தில் இதய நோய்களை உடையவர்கள் கடுமையான நிலைகளை அடையக் கூடும். இறப்பு மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் இலக்குக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு 2022ஆம் ஆண்டுக்குள் கெட்ட கொழுப்பு இல்லாத இந்தியாவை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு ஒவ்வொருவரும் முன் வரவேண்டும் என்று நினைவுபடுத்தினார்.
75ஆவது சுதந்திர தினத்தின்போது புதிய இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.