சர்வதேச அளவில், சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மொபைல்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, இந்திய சந்தையைப் பிடிக்க பல்வேறு நிறுவனங்களும் மிகக் கடுமையாக முயன்று வருகின்றன.
இந்திய மொபைல்போன் சந்தையில் ஒரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்த சாம்சங் நிறுவனம், ரெட்மி, விவோ, ஓப்போ போன்ற சீன நிறுவனங்களின் வரவால் தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றி ஆஃப்லைன், ஆன்லைன் என இரு பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன் மாடல்களைக் களமிறக்கின.
இந்தப் புதிய செயல்திட்டம் சாம்சங் நிறுவனத்திற்கு நல்ல பலனை அளித்துள்ளது. அத்துடன், தற்போது சீன எதிர்ப்பு மனநிலையும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளதால், சாம்சங் நிறுவனத்தின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல்போன் சந்தையில் (ஸ்மார்ட்போன் + ஃபீச்சர் போன்) சீனாவின் சியோமி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, 21 விழுக்காடு சந்தையை தன்வசப்படுத்தி முதல் இடத்தை பெற்றுள்ளது.
அதேநேரம் ஸ்மார்ட்போன்களை மட்டும் எடுத்துக்கொண்டால், சியோமி நிறுவனம் இன்னும் முதல் இடத்தில் தொடர்கிறது. சாம்சங் நிறுவனம் விவோவை பின்னுக்குத் தள்ளி இந்தப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆன்லைன் விற்பனையில் சியோமி நிறுவனம் 42.3 விழுக்காட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 22.8 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், ஆஃப்லைன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 29.1 விழுக்காடுடன் முதல் இடத்தில் உள்ளது.
2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள்
- சாம்சிங் M21
- ரெட்மி 8A Dual
- ரெட்மி நோட் 8
- ரெட்மி நோட் 9 ப்ரோ
- ரெட்மி 8
இதையும் படிங்க: 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்... வாயைப் பிளக்க வைக்கும் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்!