ஓப்போவின் ரியல்மீ 2018ஆம் ஆண்டு முதல் தனி மொபைல் ஃபோன் நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. ரியல்மீ நிறுவனம் கடந்த ஜூலை 15ஆம் தேதி 'ரியல்மீ X' என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. 6.53 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, இன்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 48 மெகாபிக்சல் சோனி ஐ.எம்.எக்ஸ். 586(Sony IMX 586) கேமரா என பல அம்சங்களைக் கொண்ட இந்த மொபைல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ரியல்மீ நிறுவனம் பிரபல ஹாலிவுட் நிறுவனமான மார்வலுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக ரியல்மீ X ஸ்பைடர்மேன் லிமிட்டட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பைடர்மேன் தீம்மை கொண்ட இந்த மொபைல் இன்று முதல் குறிப்பிட்ட சில ரியல்மீ ஷோ ரூம்களில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. ரூ. 20,999க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த மொபைல் ஃபோன் இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக கிஃப்டு பாக்ஸில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் ஸ்பைடர்மேன் தீம்மில் வடிவமைக்கப்பட்ட சிறப்புச் கேஸ் கவரும் இதனுடன் வழங்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு திறன்கொண்ட இந்த மொபைல்ஃபோன் நாளை முதல் பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.