ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களை வருகிற மார்ச் 23ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கேமராக்களை ஹாசல்பாட் நிறுவனம்தான் தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வீடனைத் தளமாகக் கொண்ட ஹாசல்பாட், கேமராக்கள், லென்ஸ்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும்.
இந்நிலையில், ஸ்வீடிஷ் கேமராக்களை உற்பத்தி செய்யும் ஹாசல்பாட்(Hasselblad) நிறுவனத்துடன், ஒன்பிளஸ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பயனர்களுக்குச் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குவதற்கும், மொபைல் இமேஜிங் திறன்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 150 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை ஒன்பிளஸ் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கலர் ட்யூனிங், பவர்ஃபுல் சென்சார் உள்ளிட்ட பலவற்றை கேமராவின் பிரிவில் அப்டேட் செய்யவுள்ளனர்.
இதுகுறித்து ஒன்பிளஸின் தலைமை நிர்வாக அலுவலர் பீட் லாவ் கூறுகையில், " சிறந்த புகைப்படத்தைக் கணக்கிட்டு எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஒன்பிளஸ், பிரபல கேமரா உற்பத்தி நிறுவனமான ஹாசல்பாட் உடன் 9 சீரிஸில் இணைந்துள்ளதால், நிச்சயம் கேமரா பிரிவில் ஒரு பிரீமியம் டச்சை புகைப்படங்களில் பயனாளர்களால் காணமுடியும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கலக்கல் அம்சங்களை கொண்ட புதிய மிரர்லெஸ் கேமரா அறிமுகம்