சென்னை: நோக்கியா நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தற்போது அதிநவீன அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பக் கருவிகளை சென்னையில் உருவாக்கி வருகிறது.
இந்த கருவியானது 5ஜி தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமான தொலைத் தொடர்புகளை எவ்வித தாமதமும் இன்றி வழங்குவதற்கு உதவி புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரண மொபைல்களில் உள்ளது போலன்றி, இரண்டு ட்ரான்ஸ்மீட்டர்களை கொண்டு இவை வடிவமைக்கப்படுவதால், நொடிக்கும் குறைவான நேரத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் தொலைத் தொடர்புகள் கட்டமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சுமார் 600 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான உற்பத்தி பொருள்களை நோக்கியா நிறுவனம் தாயர் செய்துள்ளது.
இந்த உற்பத்திப் பொருள்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. இதையடுத்து, தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் அதிநவீன உற்பத்தி தளத்தில் வருங்காலத் தலைமுறையினருக்காக 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு, அதனை செயல்படுத்தியும் வருகிறது. நோக்கியாவின் இந்தத் திட்டமும் மேக் இன் இந்தியாவின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், சமீபத்திய தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தவும் இந்த முயற்சி உதவும்” எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய நோக்கியாவின் இந்திய சந்தை தலைவர் சஞ்சய் மாலிக், ”எங்கள் சென்னை தொழிற்சாலை இந்தியாவின் உற்பத்தி திறன்களின் ஒரு அளவுகோலாக உருவெடுத்துள்ளது, இது இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலுள்ள ஆபரேட்டர்களுக்கு தொலைதொடர்பு தொழில்நுட்பத்திற்கு உதவும். இந்தியாவில் முதன்முதலில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கான அனைத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடமாக சென்னை மாறவுள்ளது. இது இந்தியாவில் புதுமையான உற்பத்தி திறன் மற்றும் தரமான கருவிகளை உற்பத்தி செய்வதற்கான நம்பிக்கையை நிரூபிக்கிறது” என்றார்.