வாட்ஸ்அப் செயலி அனைவரிடத்திலும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் அனைவரது கைகளிலும் வாட்ஸ் அப் இல்லாமல் நம்மால் பார்க்க இயலாது. வர்த்தகம், தொழில் அனைத்தையும் எளிதில் முடிக்க ஏதுவாக வாட்ஸ் அப் நிறைய வசதிகளை செய்து தந்துள்ளது.
இதுவரை வாட்ஸ் அப் குறுஞ்செய்தி, போட்டோ மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து புதுப்புது அப்டேட்களை அள்ளி வழங்க ஆரம்பித்துவிட்டது. வாட்ஸ் அப் மூலம் ஒரு நாளைக்கு 6 கோடியே 50 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவதுதான். நாள்தோறும் தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவதூறுகள் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து போலி செய்திகளை பரவுவதை தடுக்க அந்நிறுவனம், தனது சோதனை தளமான பீட்டா வெர்சனில் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் நாம் ஃபார்வேர்டு செய்யும் புகைப்படத்தை செர்ச் இமேஜ் (Search Image) ஆப்ஷன் மூலம் நேரடியாக கூகுளில் சென்று அதன் உண்மைத்தன்மையை ஆராயலாம்.
இந்த முறையால் போலிச்செய்திகள் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை முயற்சியில் இந்த முறை இருப்பதால், விரைவில் அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.