ஆப்பிள் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். தொழில்நுட்ப ரீதியான தனது புதிய கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில்தான் வெளியிடும். இதனால், இந்த மாநாட்டிற்கு ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக், நிறவெறியை கண்டித்தும் இதில் மாற்றத்திற்கான அவசியத்தையும் குறிப்பிட்டு தனது பேச்சைத் தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து ஆப்பிள் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐஓஎஸ் 14, ஐபேட்ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7, MacOS உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஐஓஎஸ் 14 புதிய வசதிகள்
- ஹோம் ஸ்கிரீனில் ஏகப்பட்ட மாற்றங்கள் இந்த புதிய ஐஓஎஸ் 14இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது
- அதன்படி ஹோம் ஸ்கிரீனில் காலண்டர், மேப்ஸ் போன்றவற்றை widgetகளாக வைத்திருக்கலாம்
- ஒரு புறம் மற்ற செயலிகளைப் பயன்படுத்திக் கொண்டே, மறுபுறம் வீடியோக்களை பார்க்கலாம் அல்லது வீடியோ காலில் பேசலாம்
- புதிய வகையிலான ஹேர் ஸ்டைல்கள், முகக்கவசங்களுடன் எமோஜிக்கள்
- ஆப்பிள் மேப்ஸ்களை எளிதாகப் பயன்படுத்தும் வசதி
- ஐபோன், ஆப்பிள் வாட்ச்சுகளைப் பயன்படுத்தி கார்களை ஸ்டார்ட் செய்யும் வசதி
- ஆப்பிள் வாட்ச்சுகளில் புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் ட்ராக்கிங்
- சரியான முறையில் கை கழுவுவது எப்படி என்று ஆப்பிள் வாட்ச்சுகள் மூலம் விளக்கும் வசதி
- இது தவிர ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மென்பொருளின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது
- இதன் மூலம் நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை சிரி இணையதளத்திலிருந்து தேடி, நமக்கு அளிக்கும்
இதுபோல ஏகப்பட்ட வசதிகளை உள்ளடக்கிய ஆப்பிளின் புதிய இயங்குதளங்கள், இந்தாண்டு இறுதியில் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா வழங்குங்கள்: ட்ரம்ப் உத்தரவு