இணையம் வழியே ஒருவருக்குப் பணம் அனுப்புவது என்பது கடந்த சில காலமாக மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவந்தது. இந்த கோவிட்-19 காலத்தில் பொதுமக்களால் வங்கிகளுக்குச் செல்ல முடியாததாலும், பணம் மூலம் கரோனா பரவும் என்ற அச்சம் இருப்பதாலும் இணையம் மூலம் பணப் பரிமாற்றம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப்பில் பணப் பரிமாற்றம் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. பணப் பரிமாற்றத்திற்கென்று தனியாக ஒரு செயலியைக் கொண்டிருக்காமல் இருப்பதாலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து முறையான அனுமதி பெறாமல் இருப்பதாலும் வாட்ஸ்அப் பணப் பரிமாற்ற சேவையைத் தொடங்க அனுமதி தரக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வாட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் தொடங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மூன்று வாரங்களில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பணப் பரிமாற்ற சேவையில் நுழைய வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அனுமதி தர இந்த பொதுநலவழக்கு தடையாக இருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை வளையத்தில் வதாவன் சகோதர்கள்