டெல்லி: வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கைகள், திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளப் பயனர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கால நீட்டிப்பு அளித்துள்ளது.
அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பயனர்கள் புதிய தனியுரிமை கொள்கைகள், திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேஸ்புக் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இல்லையென்றால் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது மே 15ஆம் தேதிவரை நீட்டித்து நிறுவனம் அறிவித்திருக்கிறது.
வாட்ஸ்அப் புதிய கொள்கைகளில் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், ஆனால் பேஸ்புக்கின் கீழ் இயங்கும் செயலிகள் அனைத்தும் பயனர்களின் தகவல்களை விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியானது.
இதனையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் பலர், இந்த செயலியில் இருந்து பிரிந்து, புதிதாகப் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ‘சிக்னல்’ என்ற செயலியை நாடிச்சென்றனர். அதுமட்டுமில்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலாம் மஸ்கும் ‘சிக்னல்’ செயலியைப் பயன்படுத்துமாறு ட்வீட் செய்திருந்தார்.
இதனால் தங்கள் மனநிலையை மாற்றும் எண்ணத்திலிருந்த பயனர்களைத் தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ்அப் தற்போது இந்த காலநீட்டிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து, “பயனர்கள் தரவுகள் பாதுகாப்பாகத்தான் இருக்கும். அவர்கள் எங்களின் புதிய விதிமுறைகளைக் குறித்து சரியாக புரிந்துகொள்ள நேரம் வழங்கப்படும். எனினும், எந்த சூழலிலும் பயனர்களின் கணக்குகள் நீக்கப்படாது” என்று வாட்ஸஅப் கூறியுள்ளது.