ஹைதராபாத் : ஸ்மார்ட் போன்கள் மற்றும் மின்னணு கருவிகளில் பயன்படுத்தப்படக் கூடிய சீன நாட்டின் 59 செயலிகள் கடந்தாண்டு ஜூன் 29ஆம் தேதி தடை விதிக்கப்பட்டன. தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டன.
இறையாண்மைக்கு அச்சுறுத்தல்
இதையடுத்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருந்தது. அந்த 59 செயலிகளில் டிக் டாக், ஷேர் இட் முக்கியமானவை ஆகும்.
அலிபே கேஷியர், பப்ஜிக்கு தடை
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் கீழ் மேலும் 118 சீனச் செயலிகள் தடை விதிக்கப்பட்டன. இதில் சீனாவின் இணையவழி வர்த்தக நிறுவனமான அலிபே கேஷியர், கேம் கார்டு, வீடேட் ஆகியவையும் முக்கியமானவை.
இவை தவிர பப்ஜி, ஃபஸ்ர்ட் லவ் லைவ், மேங்கே டிவி, லக்கி லைவ், சீனா லைவ், ட்ரூலி ஏசியன், டேட்டிங் ஆசியா, சீனா சோஷியல் ஆகியவை முக்கியமானவை ஆகும்.
லடாக் தாக்குதல்
முன்னதாக லடாக் எல்லையான கால்வானில் கடந்தாண்டு (2020) ஜூன் 15-16ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் சீன இராணுவத்தினர், இந்திய வீரர்கள் மீது கொலைவெறி வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி என்பவர் உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 45க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. எனினும் இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சீனாவின் அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக தொடர்ந்து நடவடிக்கைககளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சீன கடன் செயலி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்