கோவிட்-19 வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு 40 முதல் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மக்களால் வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் செய்திகளும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் கிடைப்பது தான்.
இணையப் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் Fake news எனப்படும் போலி செய்திகள் மிக வேகமாகப் பரவிவருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாவது:
சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் பொதுவாக கேளிக்கைகாகவும் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றை பயன்படுத்துகின்றனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற 370 நபர்களுக்கு போலிச் செய்திகளும் உண்மை செய்திகளும் கேளிக்கை செய்திகளுடன் காண்பிக்கப்பட்டது. ஆனால், அவற்றில் எவை உண்மையானது எவை போலியானது என்பதை இதில் பங்கேற்றவர்களால் கண்டுப்பிடிக்க இயலவில்லை.
இதில் பெரும்பாலான போலி செய்திகளை மக்கள் உண்மைான செய்தி என்றே கருதினர். அதாவது கேளிக்கை செய்திகள் வரும் இடங்களிலுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் கவலை கொள்வதில்லை என்பது இந்த ஆராய்ச்சியில் தெரியவந்தது.
இருப்பினும், இதுபோன்ற போலி செய்திகளைக் கட்டுப்படுத்த பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதால் போலி செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே, தற்போதைக்கு சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மக்கள் விழிப்புடன் அணுகுவதே ஒரே தீர்வாக இருக்கும்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் பைஜூஸ் எடுத்த முக்கிய முடிவு!