சான் பிரான்சிஸ்கோ: செப்டம்பர் முதல் பேஸ்புக் பயனாளர்கள் கணினியில் பயன்படுத்திவரும், பழைய இணைய பக்கம் மாற்றப்படவுள்ளது.
பல ஆண்டுகாலமாக இணைய உலாவிகள் மூலம் பேஸ்புக் வலைதள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனமோ செயலியை உருவாக்கி அதன் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. உலகளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியை பயன்படுத்தி, அதன் பிரத்யேக சேவைகளை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், கைபேசியின் சேமிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும் சூழல் இருப்பதால், இன்றளவும் இணைய உலாவிகளில் (ப்ரவுசர்) பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் பல ஆண்டுகாலமாக இருந்துவந்த இந்த பேஸ்புக் கிளாசிக் டிசைனை நிறுவனம் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருமென்றும், இதற்கு பதிலாக புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் கூடுதல் தகவலாக, பேஸ்புக் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அலுவலர் அன்டோனியோ லூசியோ 2022ஆம் ஆண்டில் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.