இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் தறபோது பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால் சீனாவுக்கு எதிரான மனநிலையும் சீனா பொருள்களை உபயோகிக்கக் கூடாது என்ற மனநிலையும் இந்தியர்களிடையே அதிகரித்துவருகிறது.
அதன்படி ஸ்மார்ட்போன்களிலுள்ள சீன செயலிகளைக் கண்டறிந்து நீக்க உதவும் 'Remove China Apps' என்ற செயலி இந்தியாவில் ஹிட் அடித்தது. அதேபோல சீன செயலியான டிக்டாக்கிற்கு மாற்று என்று விளம்பரப்படுத்தப்பட்ட 'Mitron' என்ற செயலியையும் பல லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இரண்டு செயலிகளையும் கூகுள் நிறுவனம் புதன்கிழமை திடீரென்று தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. கூகுளின் இந்த செயலுக்கு ட்விட்டரில் இந்தியர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
தங்கள் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதால் சில செயலிகளை வேறு வழியின்றி ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் ப்ளே பிரிவின் துணைத் தலைவர் சமீர் சமத் தனது ப்ளாக் (blog) பக்கத்தில், "சில செயலிகள் மற்ற செயலிகளைக் குறி வைத்து வெளியிடப்பட்டன. இந்த செயல்பாடு டெவலப்பர்கள், வாடிக்கையளர்கள் என இரு தரப்பினருக்கும் நல்லதாக இருக்காது என்று கூகுள் கருதுகிறது.
ஒரு செயலியின் வெற்றி என்பது அதன் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மை அடிப்பையிலேயே இருக்க வேண்டும் என்பதும் டெவலப்பர்கள் மத்தியிலான போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நீண்ட கால விதி. கடந்த காலங்களிலும் இந்த கொள்கையை மீறும் மற்ற நாட்டு செயலிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களைத் தவிர மற்ற காரணங்களுக்காக ஸ்மார்ட்போனிலிருக்கும் செயலிகளை நீக்க ஊக்குவிப்பது எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தக் கொள்கையை மீறியதால் சமீபத்தில் சில செயலிகளை நாங்கள் நீக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர வீடியோ செயலி ஒன்றும் தொழில்நுட்ப கொள்கைகளை மீறியதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான பிரச்னையை சரி செய்ய டெவலப்பர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் செயலியிலிருக்கும் சிக்கலைக் களைந்து மீண்டும் அளிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் சமீர் சமத் தனது ப்ளாக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் 'Remove China Apps', 'Mitron' ஆகிய செயலிகளை சுமார் 50 லட்சம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜியோ இயங்குதளத்தில் மட்டும் 85% முதலீடு