லிஃப்டிற்குள் ஒரு பெண் நுழைகிறாள். கண்டதும் அவள் அழகில் போதைகொண்டு அவளிடம் பேசலாமா அல்லது முத்தமிடலாமா என குழப்பத்தோடு அவளை அணுக முயலும்போது அவளது தளம் வந்ததால் லிஃப்டிலிருந்து அவள் வெளியேறுகிறாள். ஒரு ஆணுக்குள் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இந்த குறுகிய நேர சபலத்தை விவரிக்கும் இந்த வார்த்தை ஜாலமும், 72 வயதுவரை சிறிதும் குன்றாத இளமைத் துள்ளலோடு வாழ்ந்து அவர் விட்டுச் சென்ற எழுத்து நடையும்தான் சுஜாதா எனும் ஆளுமையை இன்றளவும் ரசனை பொங்க நம்மை கொண்டாட வைக்கிறது.
காத்திரமான வறண்ட எழுத்துநடையைச் சுற்றி தமிழ் இலக்கிய உலகம் இயங்கிவந்த காலகட்டத்திலிருந்து வந்த சுஜாதா, ஜனரஞ்சகத் தன்மை எனும் முக்கியமான விஷயத்தை மிகச்சரியாகக் கையாண்டு, தமிழ் இலக்கிய உலகில் எவரும் எளிதில் நிரப்ப இயலாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். வெகுஜன வாசகர்களை தீவிர இலக்கியத்திற்கு எதிராக தன் எழுத்தின் மூலம் திசை திருப்புகிறார், சுஜாதா என்பவர் ஒரு இலக்கியவாதியே அல்ல என்பன போன்ற கடும் விமர்சனங்களையெல்லாம் கடந்து தன் ஆத்மார்த்தமான வாசகர்களுக்கு அவர் அறிமுகம் செய்துவைத்த எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் ஏராளம்.
’சிறுகதை எழுதுவது எப்படி?’ மூலம் ஒரு கடைநிலை வாசகனையும் சிறுகதை எழுதவைக்க முயற்சித்த சுஜாதாவின் முத்தான சிறுகதைகளை அவ்வளவு எளிதில் பட்டியலிட்டுவிட முடியாது. ஒரு சிறுகதையின் முடிவு வாசகனுக்குள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு அவரது ’அரிசி’ சிறுகதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இன்னதுதான் மேட்ச் ஃபிக்ஸிங் என அறியப்பட்டு விவாதிக்கப்படாத காலகட்டத்திலேயே மேட்ச் ஃபிக்ஸிங்கை கதைக்களமாகக் கொண்டு கருப்பு குதிரை சிறுகதையை எழுதிய சுஜாதா விஞ்ஞான சிறுகதைகள், நாவல்கள் எனும் பரந்துபட்ட உலகை வாசகர்களுக்கு தொடர்ந்து அறிமுகம் செய்து வைத்தார்.
இன்றுவரையிலும் சாத்தியப்படாத, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற ’மெமரி டவுன்லோடிங்’ எனும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, தன் பிரதான துப்பறியும் கதாபாத்திரங்களான கணேஷ் வசந்த் மூலம் ’பேசும் பொம்மைகள்’ நாவலை நகர்த்திய விதம் சுமார் 20 வருடங்கள் கடந்தும் இன்றளவும் நம்மை சுவாரஸ்யம் குறையாமல் ஒரே மூச்சில் அட்டை டூ அட்டை படிக்க வைக்கிறது. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜூனோ மூலம் நாய்க்குட்டிகளுக்கான பெயர் தொடங்கி, இன்றைய எந்திரன் திரைப்படம் வரை நினைவுகூரப்படுகிறார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த நாயகர்களை மையமாகக் கொண்டு வரலாற்றுப் புதினம் படைக்கப்பட்டு வந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த சூழலை பின்னணியாகவும், ஒரு பாமரனை கதாநாயகனாகவும் கொண்டு ’ரத்தம் ஒரே நிறம்’ நாவலை படைத்தார்.
கருப்பு சிவப்பு வெளுப்பு எனும் பெயரில் அவர் இதைத் தொடராக எழுதத் தொடங்கியபோது கடும் விமர்சனங்களும் மிரட்டல்களும் வரத்தொடங்கின. எனவே அதை பாதியிலேயே கைவிட்டு, பின் அதே கதையை சிறிது காலம் கழித்து ரத்தம் ஒரே நிறம் என வேறு பெயரில் வெளியிட்டார். அந்த ’வரலாற்று சிறப்புமிக்க’ நிகழ்வை அதே புத்தகத்தின் பின் அட்டையிலேயே தன் பிரத்யேகக் குறும்புடன் விவரித்திருப்பார் சுஜாதா.
அனைத்து எழுத்தாளர்களுக்கும் மக்கள் மனங்களை வென்று நட்சத்திர எழுத்தாளராக விளங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு தான் எட்டிப் பிடித்த நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு எழுத்துலகோடு நின்றுவிடாமல் தமிழ் சினிமா உலகிலும் தனக்கே உரிய புதுமையும் குறும்பும் ததும்பும் வசனங்களை நிரப்பி ஒரு வசனகர்த்தாவாக மேலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்துவிட்டு சென்றிருக்கிறார்.
’முதல்வன்’ திரைப்படத்தில் வரும் அர்ஜுனின், “கடைசில என்னையும் ஒரு அரசியல்வாதியா மாத்திட்டாங்களே”, ரகுவரன் இறக்கும் தருவாயில் நினைவுகூறும் ”தட் வாஸ் எ குட் இண்டர்வியூ” உள்ளிட்ட கூர்மையான வசனங்கள் தொடங்கி, ”உலகத்தோட குட்டி காதல் கதை இதுதான்” என தில்சேவில் கொஞ்சும் காதல் மொழி பேசும் வசனங்கள் வரை, சுஜாதா பணியாற்றி சென்ற திரைப்படங்கள் அவர் ஆற்றிய பங்கை அழுத்தி சொல்கின்றன.
புதினம் ஆகட்டும், திரைப்படம் ஆகட்டும் இரண்டிற்குமான வணிக அம்சங்கள் பொருந்திய கதைகளை ஒருசேர எழுதிய ஒரு எழுத்தாளர் என்றால் அவர் சுஜாதாதான். ஆனால் ஒரு கதையை நாவலாக படிக்கும்போது வாசகனுக்கு ஏற்படும் மனநிறைவு அதை திரைப்படமாக்கும் புள்ளியில் கிடைப்பதில்லை என அவரே குறிப்பிட்டிருப்பதுபோல் திரைப்படமாக்கப்பட்ட அவரது நாவல்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை அல்லது ஒரு புதினத்தை திரைப்படமாக்கத் தெரிந்த சரியான இயக்குநரின் கைகளில் சென்று சேரவில்லை.
பத்திரிகை, பொறியியல், எழுத்துலகம், சினிமா தாண்டி தமிழ் கூறும் நல்லுலகின் டிஜிட்டலைசேஷனையும், கணினிமயமாதலையும் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்து அதற்கான முயற்சிகளையும் தன் இறுதிக்காலம்வரை தொடர்ந்து வந்தார் சுஜாதா. இன்றைக்கு இத்தனைப் பரவலாக தமிழ் மொழி இணையத்தை ஆட்கொண்டிருப்பதைக் கண்டால் நிச்சயம் உற்சாகம் பொங்க தன் கணினிக் கைகளால் இளமைத்துள்ளலுடன் விஞ்ஞான சிறுகதைகள் எழுதித் தள்ளியிருப்பார்.
72ஆம் வயதில் தான் இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அப்போலோ தினங்கள் என்கின்ற தலைப்பில் எழுதிய சுஜாதா விரைவில் வீடு திரும்ப வேண்டும், ஒழுங்காக சாப்பிட வேண்டும் என தன் கட்டுரையை முடித்திருந்தார். இளைஞர்களுடன் பத்து கட்டளைகள் குறித்து உரையாடிய சுஜாதாவிடமிருந்து இந்த தன்முனைப்பை மட்டுமேயாவது பற்றிக்கொள்ள முயற்சிப்போம்.