80, 90-களில் ஆக்ஷன் ஹீரோயின் எனப் பெயர் எடுத்தவர் நடிகை விஜயசாந்தி. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார்.
இவர் நடித்த ஆக்ஷன் படங்கள், ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு இணையாகப் பேசப்பட்டன. இதனால் இந்தியத் திரையுலகில் முதல் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்றும் இவர் அழைக்கப்பட்டார். 1990-களில் மிக அதிகமான சம்பளம் வாங்கிய நடிகை என விஜயசாந்தியைச் சொல்லுவார்கள்.
ஆக்ஷன் க்யூன்
கிரண்பேடி ஐபிஎஸ்ஸின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வைஜயந்தி திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெளியான கர்தவ்யம் படத்தின் ரீமேக் ஆகும். போலீஸ் திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு ஈடாக மாஸ் காட்டியவர் விஜயசாந்தி.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, டோலிவுட் சென்றவர் ஒருகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். ரஜினிகாந்துடன் இவர் நடித்த 'மன்னன்' திரைப்படம் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. இந்தப் படத்திற்குப் பின் இவர் நடித்த, ஒருசில படங்கள் சரியாக ஓடவில்லை.
அரசியல் பிரவேசம்
பின்னர் அரசியலில் களமிறங்கிய விஜயசாந்தி, திரையுலகைவிட்டு விலகியிருந்தார். பாஜகவின் மூலமாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜயசாந்தி, தனித் தெலங்கானா பிரிவினைக்காக, `தல்லி தெலங்கானா' என்னும் கட்சியைத் தொடங்கினார். பிறகு, டி.ஆர்.எஸ். கட்சியில் தனது கட்சியை இணைத்துக்கொண்டார்.
2009 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். பின்னர் உள்கட்சிப் பூசல் காரணமாக, தெலங்கானா உருவாக்கத்துக்கு முன் 2014ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகிய விஜயசாந்தி காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து 2020 டிசம்பரில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்து மீண்டும் தனது ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கிறார்.
ரோல்மாடல் ஜெயலலிதா
தனது திரைப்படங்களைப் போல, அரசியலிலும் பல அதிரடி நிலைப்பாடுகளை எடுத்தவர் விஜயசாந்தி. பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அரசியலில் என்னுடைய ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன் எல்லாமே ஜெயலலிதாதான். என்மீது அவர்கள் அதிக அன்பு வைத்திருந்தார்கள்" எனத் தெரிவித்திருப்பார்.
நடிகைககள் அதிக ஊதியம் வாங்குவது குறித்து சர்ச்சை எழுந்தபோது, “ஒரு நடிகர் அதிக ஊதியம் வாங்கினால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு நடிகை அதிக ஊதியம் வாங்கினால் அதைச் செய்தியாக மாற்றிவிடுகிறீர்கள்” எனப் பொதுவெளியில் வெளிப்படையாகத் தனது கருத்தைப் பதிவுசெய்தார்.
நடிகை விஜயசாந்தி இன்று 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: எத்தனை லியோன்கள், கலீஃபாக்கள் வந்தாலும் கண்கள் காண துடிக்கும் சில்க்