ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் ஆலயத்தின் நடை, குளிர்காலத்தை முன்னிட்டு இன்று (நவ.19) அதிகாலை மூடப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் ஆலயம் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இந்த விஷ்ணு ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இது கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. சார்தாம் யாத்திரை செல்லும் நான்கு புதின தலங்களுக்குள் பத்ரிநாத் ஆலயமும் ஒன்று. மகாவிஷ்ணு இங்கு தவம் புரிகையில், மகா லட்சுமி மரமாக இருந்து அவருக்கு நிழல் கொடுத்தார் என்பது இக்கோயில் தொடர்பான ஆன்மிக நம்பிக்கை.
அன்றிலிருந்து இந்த இடம் பத்ரிநாத் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள், யாத்ரீகர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோயில் தரிசனத்துக்காக ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படும்.
அதன்பிறகு குளிர்காலத்தில் கோயில் நடை மூடப்படும். இந்நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கும்.
அதன்படி இன்று (நவ.19) அதிகாலை 3.35 மணிக்கு கோயில் மூடப்பட்டது. இக்கோயிலில் விஷ்ணு சிலை ஒன்று தியானக் கோலத்தில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயில் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பத்ரிநாத் ஆலயம்!