கோயம்புத்தூர், வெரைட்டி ஹால் காவல் துறையினர் இன்று(நவ.3) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெலுங்கு வீதி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் காவல் துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இருவரையும் துரத்திப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது ஐம்பொன் சிலையின் உடைந்த பாகம் ஒன்றை, அவர்கள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஒருவர் காந்தி பார்க் சலிவன் வீதியைச் சேர்ந்த ஹரி ஜெயச்சந்திரன் என்கின்ற ஹரி என்பதும், மற்றொருவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பால வெங்கடேஷ் என்பதும், தெரியவந்தது.
இருவரும் அளித்த வாக்குமூலத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், 200 கிராம் எடை கொண்ட ஐம்பொன் சிலையின் உடைந்த பாகத்தைக் கொடுத்து விற்றுத் தர சொன்னதாகவும், அதற்கு உரிய கமிஷன் தருவதாக அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் கோயம்புத்தூரில் தங்கப் பட்டறைகள் அதிகம் உள்ள தெலுங்கு வீதி பகுதியில், ஏதாவது ஒரு தங்கப் பட்டறையில் ஐம்பொன் சிலையின் உடைந்த பாகத்தை விற்க முயற்சி மேற்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.
இதனை அடுத்து வசிப்பிடங்களில் பொருட்களைத் திருடுதல், திருடிய பொருட்களை விற்க முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெரைட்டி ஹால் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!