திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள ஆவிடைதேவன்குளத்தை சேர்ந்த நாகமுத்து - பக்கிரியம்மாள் தம்பதியரின் இளைய மகன் கனகரத்தினம் (21). இவர் மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இளைஞர் கனகரத்தினம் பெண் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனகரத்தினம் வேலைக்கு செல்லாமல் அவர் பழகி வந்த பெண் ஒருவரிடம் கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கனகரத்தினத்தின் பெற்றோர் அவரிடம் கேட்டதற்கும் சரியான பதில் கூறவில்லை.
இந்நிலையில் இன்று காலை முதல் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர்.
இன்று மதியம் மண்ணுக்குமுண்டான் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் பெருகவாழ்ந்தான் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது பாப்பான் வாய்க்கால் எனும் இடத்தில் உள்ள வாகை மரம் ஒன்றில் இளைஞர் கனகரத்தினம் தூக்கில் தொங்கிய படி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் காவல்துறையினர் கனகரத்தினத்தின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞரின் மரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் பரிதாபம்!