சென்னை: விசாரணைக்குச் செல்லும் வழியில் அரசுப் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சென்னை சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சதீஷ் குமார் (33), பக்கத்து வீட்டுப் பெண்ணான பானு தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குடிபோதையில் பானு வீடு மீது கல்வீச்சி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பானு புகாரளித்துள்ளார். புகாரை எடுத்துக்கொண்ட காவல் துறையினர், சதீஷை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது பணி முடிந்து மாலை 4 மணியளவில், செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற சதீஷை, காவல் துறையினர் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் சதீஷ், காவலர்களின் மிரட்டலுக்கு பயந்து, யாரும் எதிர்பாராத நேரத்தில், காவல் நிலைய வாசலில் இருந்து அரசுப் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக வெளியே வந்த காவல் துறையினர், அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.