சேலம்: ரவுடி கோழி பாஸ்கரை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது உறவினர்கள் 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், கோழி பாஸ்கர். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் சேலம் மாநகர காவல் நிலையங்களில் உள்ளது. இச்சூழலில், கொலை வழக்கு ஒன்றில் கைதான பாஸ்கரும், அவரது சகோதரர் ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓராண்டாக தலைமறைவாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து தீபாவளியையொட்டி பாஸ்கர் அவரின் வீட்டில் இருப்பதாக, மாநகர காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலையடுத்து, ரவுடி கோழி பாஸ்கரின் வீட்டை காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். பின்னர் நேற்று (நவ 14) மதியம் 3 மணியளவில், காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர், பாஸ்கரின் வீட்டின் உள்ளே புகுந்து, அவரையும் அவரின் சகோதரரையும் அதிரடியாக கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கோழி பாஸ்கர் வீட்டில் இருந்த அவரின் மனைவி உஷாவும், உறவினர்களும் காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து, கைது நடவடிக்கையின்போது தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில், உஷாவும், உறவுப் பெண்கள் என 8 பேரும் நேற்று (நவ 14) நள்ளிரவு நேரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே நின்று மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். அதனைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாஸ்கர் மீது காவல் துறையினர் வேண்டுமென்றே வழக்குகள் பதிவுசெய்து வருவதாகவும், நேற்று(நவ.14) அவரை கைது செய்ததாகவும், அதனால் தான் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர் எனவும் தெரியவந்தது. ஆனால், அதனை காவல் துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.