ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்குட்பட்ட ஜம்பை அருகேயுள்ள நத்தக்காட்டுத்தோட்டம் கருப்புப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமாரின் மனைவி சுபத்ரா. இவரை, ஈரோடு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளரும், தனியார் மருத்துவமனை மருத்துவருமான மகேஷ்ராஜா ஆசைவார்த்தைக் கூறி கடத்தி வைத்திருப்பதாகவும், தனது 7 வயது பெண்குழந்தையையும் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருப்பதாகவும் சசிகுமார் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது மனைவி, மகளை மீட்டுத்தருமாறு கடந்த 5ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவினையும் அளித்திருந்தார்.
இந்நிலையில், சுபத்திரா நேற்று (ஆகஸ்ட் 10) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், தன்னை யாரும் கடத்தவில்லையென்றும் தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டிருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், விவாகரத்து கேட்டிருப்பதால் தாய் மற்றும் கணவர் வீட்டார் தனக்கு உதவும் குடும்ப நண்பரான மருத்துவர் மகேஷ்ராஜா மீது வீண் பழிசுமத்துவதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கும், தனது குழந்தைக்கும் கணவரால் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறிய அவர், தக்க பாதுகாப்பை வழங்கவேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளார். கணவர், மனைவி ஆகியோர் பரஸ்பரம் புகார் தெரிவிப்பதால் குழப்பமடைந்துள்ள காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்