திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி லட்சுமி (55). இவர் தும்பலப்பட்டியில் மளிகைக் கடை நடத்திவருகிறார்.
இன்று குண்டடம் சந்தையில் கடைக்குத் தேவையான மளிகைச் சாமான் வாங்கிக் கொண்டு லட்சுமி மொபட்டில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். அவர் குண்டடம் - கோவை சாலையில், ருத்ராவதி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குண்டடம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மொபட்டில் மோதியது, லட்சுமியின் மளிகைக் கடை அருகே, மற்றொரு மளிகை கடை நடத்திவரும் மயில்சாமி என்பவர் ஓட்டிவந்த கார் என்பது தெரியவந்தது.
இதனால், சந்தேகத்தின்பேரில் மயில்சாமியைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது, தொழிற்போட்டி காரணமாக மொபட் மீது காரை மோதச்செய்து கொலை செய்துவிட்டு, விபத்துபோல ஜோடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மயில்சாமியை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலைசெய்ய பயன்படுத்திய காரையும் பறிமுதல்செய்தனர்.
இதற்கிடையில் கொலை நடந்த இடத்தை திருப்பூர் காவல் கண்காணிப்பாளர், திஷாமித்தல், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், குண்டடம் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!