கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மாதம் மே 25ஆம் தேதி கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு கத்தியை அகற்ற முடியாததால், மே 26ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டார். அங்கும் கத்தியை அகற்ற முடியாத சூழலில், கோவை அரசு மருத்துவமனையில் மே 27ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில், ஒரு அங்குலம் வரை கத்தியின் கைப்பிடி வெளியில் தெரிந்ததைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் கத்தியை வெளியில் எடுத்தனர். கத்தி பாய்ந்த இடத்தில் இருந்த உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாததால் அறுவை சிகிச்சை சுலபமாக முடிந்தது.
அறுவை சிகிச்சை முடிந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், 30 மணி நேரம் கத்தியுடன் உயிருக்குப் போராடியவரை காப்பாற்றியது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 'புதிய தொழில் கத்துக்கோங்க' - கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்