வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை சாலை வி.டி.கே நகரில் 30 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த 108 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை நேற்றிரவு(நவ.14) மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இன்று காலை கோயில் நிர்வாகிகள் பூஜை செய்வதற்காக கோயிலுக்கு சென்றபோது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது சிலை திருடு போனது தெரியவந்துள்ளது. கோயிலில் சிலை திருடு போன சம்பவம் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலை திருட்டு சம்பவத்தில் கோயில் நிர்வாகிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அல்லது ஊர் பொதுமக்களில் யாரேனும் திருடியுள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.