மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாகத் திருடுபோனதாக அலங்காநல்லூர், ஒத்தக்கடை, தல்லாகுளம் போன்ற காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன.
இதனிடையே இருசக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைப் பிடிக்க மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களைத் திருடும் கும்பல் ஊமச்சிகுளம் பகுதியிலிருந்து அலங்காநல்லூர் நோக்கி திருடிய பைக்கில் வருவதாக அலங்காநல்லூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் துறையினர் வருவதை அறிந்த கும்பல் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவி ட்டு தப்பியோட முயன்றனர்.
அப்போது, காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், இரண்டு இளைஞர்களும் தொடர்ச்சியாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டுவந்தது, ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் (22), 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. குற்றவாளிகளைக் கைதுசெய்த அலங்காநல்லூர் காவல் துறையினர் இருவரிடமிருந்து ஆறு இருசக்கர வாகனங்கள், 10 செல்போன்கள், மடிக்கணினி, ஏர்கூலர், ஒன்றேகால் சவரன் தங்கத்தோடு உள்ளிட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
பின்னர், இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர். தப்பியோடிய கும்பல் தலைவன் பெரியசாமி (எ) பொட்டு கடலையை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலம்பெற வைகோ ஆறுதல்!