இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செட்டிகுளம் சந்திப்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி கோட்டார் காவல் துறையினர் தலைக்கவசம் குறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் தடுத்தும் நிற்காமல், காவலர் மீது இருசக்கர வாகனத்தால் மோதி கீழே தள்ளி, தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின் காவல் துறையினர் தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி வந்தனர்.
தொடர்ந்து, காவல் துறையினரின் இருபது நாள் தேடுதலுக்குப் பின் சுசீந்திரம் அருகே மைலாடியைச் சேர்ந்த சுபாஷ், பிரைட் நிஷ் ஆகிய இரு இளைஞர்களையும் கோட்டார் காவல் துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: '2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!