புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே வடக்கு, தெற்கு புதுக்குடி என இரு கடலோர கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
இதையடுத்து இன்று (நவ. 3) காலை தெற்கு புதுக்குடி பகுதியில் ஒரு பார்சலும், வடக்கு புதுக்குடி பகுதியில் ஒரு பார்சலும் கரை ஒதுங்கியது. இதைக் கண்ட மீனவர்கள், மணமேல்குடி கடலோரப் பாதுகாப்புக் குழு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் ஆய்வாளர் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ராமராஜன், காவலர்கள் ரங்கநாதன், பாரதி சிவக்குமார் அடங்கிய காவல் துறையினர் பார்சலைப் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 56 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்ததை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கஞ்சாவை கைப்பற்றி சிவகங்கை மாவட்டம், நுண்ணறிவுப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் ஹேமலதா வசம் ஒப்படைத்தனர். மேலும், கரையோரம் ஒதுங்கிய கஞ்சா தொடர்பாக நுண்ணறிவு காவல் துறையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீசையால் சிக்கிய தி.நகர் நகைக்கடை கொள்ளையன் - போலீஸ் விசாரணையின் முழு விவரம்!